Skip to main content

நரகம்




“சார், சந்தோஷ் வந்துருக்காரு”, வீட்டின் முன்பகுதியில் பொருத்தப் பட்டிருந்த பேஸ் டிடக்டர் ஒலித்தது. தின செய்தியை கேட்டுக் கொண்டிருந்த அன்புவின் முகம் சட்டென்று மலர்ந்தது. “உள்ளே வர அனுமதி” ஆணையிட்டான் வெளிக் கதவு திறப்பதற்கு.

“என் வீட்டுக்கு வர இன்று தான் கூகிள்ல வழி கண்டுபிடிச்ச போல” சற்று கோபம் கொண்டவன் போல நடித்தான் தன் கல்லூரி நண்பனிடம். “சரி விடு. அதான் இன்னிக்காவது வந்துருக்கேன்னு சந்தோச பட்டுக்கோ” சிரித்துகொண்டே விடையளித்தான்.

“கண்ணு, யாரு வந்துருக்கானு பாரு” உள்ளே இருந்த தன் மனைவி சந்தியாவை அழைத்தான். அவள் உள்ளே என்ன வேலை செய்து கொண்டிருந்தாள் என்பது தெரியவில்லை. “அப்படிப்பட்ட வி.ஐ.பி யாரு வந்துருக்கா??” நக்கல் அடித்துக்கொண்டே வெளியே வந்து நின்றவள் ஆனந்தம் கொண்டவளாய் “வாங்க ப்ரோ, என்ன இந்த பக்கம்?? உங்களுக்கு தான் இப்படி ஒரு சிஸ்டர் இருக்கறதே மறந்து போச்சே” அதே நக்கலுடன்.

“அட என்னமா சந்தியா, நீயுமா என்ன புரிஞ்சுக்கல!!” பேச்சில் கவலை சாயலுடன் சந்தோஷிடம் இருந்து பதில் வந்தது. “சரி விடுங்க, வந்ததும் வராததுமா அதை பத்தி பேசிக்கிட்டு” என்றவள், பேச்சை மாற்றி வந்தவரை உபசரிப்பதாக “ப்ரோ என்ன சாப்புட்ரிங்க, லெமன் ஜூஸ் தானே” என்றாள்.

சிரித்துகொண்டவனாக, ”பாரேன் பா..நீ இன்னும் மறக்காம இருக்க!!”

“அதை எல்லாம் மறக்க முடியுமா ப்ரோ”,என்று வாய் சொல்லிக்கொண்டிருக்க கண்ணில் கண்ணீர் எட்டி பார்த்தது. கல்லூரி ஞாபகம் தான்..வேறு என்ன.

ஆம்..ஒரு காலத்தில் காடு போல் காட்சியளித்து குளுமையான வளாகம் என்று பெயர் பெற்ற எம்.ஐ.டி.யில் பயின்றவர்கள் தான் இவர்கள். மூவரும் ஒரே டிபார்ட்மெண்ட் மாணவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டு பின் அதுவே சொந்தம் ஆக்கியது..

கண்ணீரை துடைத்து கொண்டவளாக “ஐந்தே நிமிடம் வந்து விடுகிறேன்.”. கூறிவிட்டு உள்ளே நுழைந்தவள், அரசாங்கம் கொடுத்துள்ள டோகெனை எடுத்து தண்ணீர் மிசினில் சொருகினாள், பின் 2௦௦ மி.லி. தண்ணீர் வருவதற்கான பொத்தானை அழுத்தினாள்.

கிர்ர்ர்ர்....”ம்ம்ம்..இதோ வந்துவிட்டது” அறையில் ஒரு மூலையில் இருந்து லெமன் ஜூஸ்  செய்வதற்கான பொடி உள்ள பாக்கிடை பிரித்து, அதனை தண்ணீரில் கலந்தாள்.

“ஜூஸ் ரெடி” கூவிக்கொண்டே வெளியே வந்தாள்.

ஜூசை சந்தோஷிற்கு கொடுத்தாள். “சாரி ப்ரோ..உங்களுக்கு ஒரு கிளாஸ் ஜூஸ் பத்தாதுனு தெரியும்..இருந்தும் காலத்தின் கட்டாயம்” முகம் சுருங்கியது அவளுக்கு.

“அட இதுக்கு நீ என்னமா பண்ணுவ?? இதலாம் எதிர்பார்த்தது தானே.”

“உண்மை தான்..நாம் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே சொல்லிக்கொண்டு தான் இருந்தார்கள்..வருங்காலம் தண்ணீர்க்காக மிகவும் கஷ்டம் கொள்ளும் என்று..நம்மவர்கள் கேட்கவில்லை”

“சரி விடுங்க..அதை பற்றி இப்பொழுது பேசி என ஆகிவிடபோகிறது.” அன்பு குறுக்கிட்டான். “நீ வந்திருக்கிற காரணம் தான் என்ன”

“எல்லாம் நல்ல விஷயம் பேசுவதற்கு தான்.” மகிழ்ச்சியோடு தொடர்ந்தான், “என் மகனும் உன் மகளும் கல்லூரியில் இருந்தே காதலித்து வருகிறார்கள்.”

“ஆமாம்..அது தெரிந்த விஷயம் தானே..”,குறுக்கிட்டன்.

“அவர் ஏதோ சொல்ல வருகிறார் அதை கூற விடுங்கள்”, காதல் கலந்த அதட்டதோடு தன் தாமரை கைகளால் அவனை தடுத்தாள்.

சந்தோஷ் தொடர்ந்தான், “அது தெரிந்த விஷயம் தான்..அவர்கள் திருமணத்திற்காக அரசிற்கு விண்ணப்பம் கொடுத்திருந்தோம் அல்லவா. அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. வருகிற மே மாதத்திற்குள் செய்து விட வேண்டுமாம்..ஆணையிட்டு விட்டார்கள்.”

“ஓ..நீ அந்த விசயமாக கூற வந்தாயா..உன் மகன் எங்க இருக்கான், அவனையும் கூட்டிட்டு வந்துருக்கலாம்..பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு”
“எனக்கும் ஆசை தான்..இது அறுவடை செய்ய வேண்டிய நேரம்..அங்கேயே இருந்து பார்த்துக்கணும்..அதான் நான் மட்டும் வந்தேன். உன் பொண்ணு என்னமோ ஆராய்ச்சி வேலையா வெளிநாட்டுக்கு போயிருகரா போல..என் பையன் சொன்னான்.”

“அட ஆமா ப்ரோ..ஒழுங்கா வீட்டுலே இருக்கலாம்..எங்க சொன்ன கேக்குறாங்க..”சலித்து கொண்டாள் சந்தியா.

“விடுமா..படிச்ச நாமலே இப்படி எல்லாம் சொல்லலாமா..நீ கூடதான் வெளி நாட்டுல போய் செட்டில் ஆகிடனும்னு இருந்த..”ஏளனமாக சிரித்தான்.

“விடுங்க பழச எதுக்கு பேசிக்கிட்டு..” சாமர்த்தியமாக சமாளிபதாக எண்ணம் அவளுக்கு.

“அதுவும் சரி தான்..உன் பொண்ணு எப்ப வராளாம்??”

“இந்த வாரம் வரேன்னு சொல்லிருக்கா..ப்ரோ”

சிறிது நேரம் அமைதி அடைந்தது அவர்கள் இருந்த அறை. திடிரென்று, “என்னடா அன்பு அமைதியா இருக்க..என்ன யோசனை??”

“எல்லாம் நம்ம கல்லூரி நெனப்பு தான் டா...நம்ம காலேஜ் எப்படி இருந்துச்சு ஒரு காலத்துல....நம்ம செட்ல தான் ரொம்ப மோசம் ஆச்சு..புயல் காத்துல பாதி மரம் போச்சு..மீதிய அவங்களே வெட்ட முடிவு பண்ணாங்க..எப்படியோ..நம்ம ஒற்றுமையா இருந்ததுனால ஒரு பெரிய போராட்டம் பண்ணி தடுத்தோம்..”

“உண்மை தான் டா..”,அவனுக்கும் கண்ணீர் எட்டி பார்த்தது. “அதுக்கு அப்றோம் நீ காலேஜ் பக்கம் போன??” சந்தோஷ் வினவினான்.

“எங்க டா..நான் தான் காலேஜ் முடிஞ்ச ரெண்டு வருசத்துல டெல்லிக்கு போய்டேன்ல..உனக்கு தெரியாதா?? திரும்பி வந்தா..ஒரு சில டிபார்ட்மென்ட் தவிர எல்லா படிப்பையும் விவசாய படிப்பா மாத்திட்டாங்க....ஆராய்சிகளும் கண்டுபிடிப்புகளும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில மட்டுமே இருக்கனும்னு வேற உத்தரவு போட்டுட்டாங்க...அவனவன் விருப்பப்படி எதையும் படிக்கவே முடியறதில்ல..இதுல சீரீஸ் ஒரு கேடான்னு ஜூனியர் எல்லாம் சீரீஸ்னு ஒன்னு இருக்கறதே மறந்துட்டாங்க...”

“அதுவும் சரி தான்...”

“எதை சரினு சொல்லுற நம்மக்கு சீரீஸ்னு ஒன்னு இல்லாம அழிஞ்சு போச்சே அதையா??”, கோபம் தலைக்கு ஏறியது அன்புக்கு.

“டேய்..அதை யாராச்சும் நல்ல விஷயம்னு நினைப்பாங்களா???எல்லா படிப்பையும் விவசாயம் சம்பந்தப்பட்ட படிப்புகளா மாத்திடாங்கனு சொன்னியே அதைச் சொன்னேன். அப்படி மாத்தினது தான் நமக்கு இப்போ சாப்பாடு கிடைக்க காரணம்.”

“ஆமா ஆமா...கண்டிப்பா எல்லாரும் அவங்க வீட்டுல மொட்டைமாடி விவசாயம் செய்யணும்னு ஆணையிட்டது, நிலம் எல்லாம் அரசு கையகபடுத்தி..அதுலயும் விவசாயம் செய்றதுனு சில விஷயங்களை பண்ணுனது தான், விவசாயம் ஊசி முனைல காப்பாத்தமுடிஞ்சுது...”

“சரி..ப்ரோ நேரம் ஆகுது..யாருக்கும் பசி எடுக்கலையா என்ன??”

“நீ இன்னும் மாறல தான்..சாப்பாடு விசயத்துல சரியா இருக்க..”

“ஆமா இங்க சாப்பாடு சத்திரம் எங்க இருக்கு??”

அது என்ன சாப்பாடு சத்திரம்னு யோசிக்க தோணும்...அது ஒவ்வொரு தெருவிலும் அமைந்து இருக்கும்..ஒவ்வொரு வீட்டிலும் சாப்பாடு செய்யுறத அரசாங்கம் தடை பண்ணிட்டாங்க...அதுக்கு மாற்றாக தான் இந்த சாப்பாடு சத்திரம்..அவரவர்க்கு எந்தெந்த சத்துக்கள் எந்தெந்த அளவு தேவையோ அதற்கேற்ற சாப்பாடு மட்டுமே அங்கு வழங்கப்படும்

“என்ன இருந்தாலும் நம்ம தலைமுறைக்கு தான் உணவு அவரவர் விருப்பப்படி கிடைத்தது....இன்றைய நிலையை கண்டால்..கஷ்டம் தான்..சாப்பிடும் உணவு கூட நம் விருப்பப்படி உன்ன முடியவில்லை என்றால் நாம் வாழ்வது பூமியா இல்லை நரகமா??என்று கேள்வி தான் எழுகிறது.”

மூவரும் வீட்டை விட்டு புறப்பட்டார்கள்.
.”டோர் க்ளோஸ்”, ஆணையிட்டான்.

Comments

Post a Comment