Skip to main content

இருள்


(குறிப்பு: இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவியது)



ஞாயிற்று கிழமை, விடுமுறை தினம். சரி டிவியில் எதாவது படம் பார்ப்போம் என்று அமர்ந்தேன். நான் ஏமாற்றம் அடையவில்லை; அது ஒரு திகில் படம். அதுவும் ஒரு திறமையான இயக்குனரின் முதன் முயற்சி. படம் மிகவும் சுவாரசியமாக தான் சென்று கொண்டிருந்தது. தனியாக பார்க்கும் அறிய வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. படத்தின் சில நிகழ்வுகள் என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை தான் மனதில் கொண்டு வந்தது..மறக்க கூடியதா அது!!

டிசம்பர், 2015. கோரமான மழையாலும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் சென்னையும் அதன் உயிர்களும் (ஆம்..எல்லா உயிர்களும் தான்) தத்தளித்து கொண்டிருந்த நாட்கள். அது எனக்கு கல்லூரியின் முதலாமாவது வருடம்.

கல்லூரியே காலியாய் இருந்தது..எல்லா மாணவர்களையும் அவரவர் ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததின் விளைவு தான். வியப்பில்லை. என்னோடு சேர்த்து ஒரு நான்கு ஐந்து மாணவர்கள் அடுத்த நாள் பயணத்திற்கு முடிவெடுத்தோம். எங்களை விடுதியினுள் இருக்க அனுமதிக்க வில்லை, மாறாக நாங்கள் உணவகத்தின் மேசைகளை படுக்கைகளாக எண்ணிகொண்டோம்.

கடிகார முட்கள் மட்டுமே அதனை மாலை வேலை என்றது. நாள் முழுவதும் இரவின் இருள் தான் குடிகொண்டிருந்தது (மின்சார சேவை பல நாட்களாக துண்டிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்க)..மழை தணிந்து லேசாக தூற்றி கொண்டிருந்தது. நானும் என் சக நண்பன் ஒருவனும் விடுதியினுள் செல்ல முடிவெடுத்தோம், இருளை பொருட்படுத்தவில்லை. எதற்காக சென்றோம் என்பது இப்பொழுது எனக்கு எட்டவில்லை, மன்னிக்கவும்.

உள்ளே நுழைந்தோம். இருள் இன்னும் பெருகியது போன்ற எண்ணம். திடிரென்று எங்கள் முகத்தை நோக்கி வெளிச்சம், கண்கள் கூசியபடி பார்த்ததில், அது ஆஸ்டல் வாட்ச்மேன் அடித்த டார்ச் ஒளி என்றறிந்தோம்.

"அட..இந்தாளுக்கு தில்லு கொஞ்சம் அதிகம் தான் போல..இந்த இருட்டுள கூட மனுசன் தன்னந்தனியா உக்காந்து கிடக்கான்..",பேசியபடி படியை ஏறினோம்.

முதல் தளம் மிகவும் விரைவாகவே வந்தது போல் இருந்தது. அவன் கழன்டிகொண்டான், அவன் அறை அத்தளதில் உள்ளதால். இப்பொழுது நான் ஒற்றை பிரயாணி; இலக்கு இன்னும் இரு தளத்திற்கு மேல் (மூன்றாம் தளம்-என் அறை அங்கு தான் உள்ளது..)!!

இருள் இன்னும் பெருகியது போல் ஒரு பிரம்மை. இருளில் கண்களின் ரெட்டினா செல்களால் கொஞ்சம் பார்வை கிடைக்கும் என்று படித்திருக்கிறேன்; ஆனால் அந்நேரம் என் ரெட்டினாகளும் என்னை ஏமாற்றியதை உணரமுடிந்தது. அட்ரினலின் உடல் முழுவதும் சுற்றி வந்தான்..என் பயத்தை அதிகரித்தான்...

ஒவ்வொரு படிகளையும் கடக்க பல யுகங்கள் ஆயின. சினிமாவில் வருவதுபோல தான், நடக்க நடக்க ஒரே இடத்திலே இருப்பதாக எண்ணம் (நான் பார்த்துக்கொண்டிருந்த படத்திலும் அப்படி ஒரு சீன் இடம்பெற்றது). நம் மனம் இருக்கிறதே, அது ஒன்றே போதும்..நம்மை அழித்துவிட. என்னோடு அதன் உரையாடலை ஆரம்பித்தது.

"இந்த இருள் பேய்களின் ஆனந்த வருகைக்கு உகந்தது..அனைவரும் தான் இறக்கின்றனர். இறந்த அனைவருமா பேயாகிறார்கள்?? கண்டிப்பாக இல்லை..யாருடைய ஆசை நிறைவேறாமல் இருக்கிறதோ அவர்களுடைய ஆத்மா பேயாக அலையுமாம்..இங்கு வேறு கதிரவனை கறுப்பு துணியால் மூடியது போல் ஒரு இருள்..உன் அருகிலே கூட எதாவது பேய் இருக்கலாம்..கொஞ்சம் ஜாக்கிரதை.."என்றது.

திடிரென்று திரும்பி பார்க்க எண்ணம்..அனால் மறுத்தேன். ஒருவேளை அது நான் கடந்து வந்த பாதையில் இருந்திருக்கலாம். அதன் எண்ணம் என்னை அழிப்பதாக இருந்தால் நான் வரும்போதே தன் தீரத்தை காண்பித்திருக்கும். நான் அனாவசியமாக திரும்பி பார்த்து, அதற்கு  கோபம் உண்டானால்..ஐயோ..வேணாம் வேணாம்!!

"நீ பார்க்காததால் அது உன்னை விட்டுவிட்டது என்று நினையாதே நண்பா..பல நேரங்களில் அவை திடிரென்று பின்னால் இருந்து தலையில் படார் என்று அடிக்குமாம்..அப்பொழுது அந்த அதிர்ச்சி இருக்கிறதே..ஐயோ..உடல் பாதி பாடி ஆகிவிடும்".

நொடிபொழுதில் மின்னலென பாய்ந்தேன்..மூன்றாம் தளத்திற்கு.

"ஓடாதே நண்பா..அது துரத்தி வந்து தாக்கினால்...!!!!", என்று கூற இழுத்தது.

அந்நேரத்தில் நான் அடைந்த பயத்தை விளக்க வார்த்தைகள் இல்லை..வாழ்ந்து பார்த்தல் மட்டுமே உணர முடியும்..அப்பப்பா!!!

ஒருவழியாக அறையை வந்து அடைந்தேன்..உள்ளே இருட்டில் தடவிக்கொண்டே எங்கிருந்தோ என் குடையை கண்டெடுத்தேன். அதனை என் அறையின் வெளியில் சுவரில் சாய்த்தபடி வைத்துவிட்டு எதையோ மீண்டும் தேட சென்றேன்..

உண்மைதான்..அனால் நீங்கள் நம்பமாட்டீர்கள்..ஏனோ ஒரு எண்ணம் எனக்குள்; திடிரென்று வெளியே எட்டி என் குடையை பார்த்தேன்!!-இருக்கிறதா? என்று. நான் ஏன் அவ்வாறு பார்த்தேன் என்று எனக்கு இன்னமும் தெரியவில்லை. ஒரு வேலை என்னை பின்தொடர்ந்த ஆத்மா என் குடையை எடுத்துக்கொண்டு என்னை பயமுறுத்த நினைக்கும் என்று தோன்றியதோ?? இருக்கலாம்..

வெளியே செல்ல வேண்டும்..மீண்டும் மின்னலென பாய்ந்தேன்.

இரண்டாம் தளம்..

முதல் தளம்..என் நண்பனை கூட தேடவில்லை.

கீழ்த்தளம் வந்ததும்..வந்த வேகத்தில் யார்மேலோ முட்டினேன்..மூர்ச்சையாகி விழுந்தேன்.

நான் ஒருவேளை அந்த ஆவியினை மோதி இருப்பேனோ?? இருக்காது; அதில் உறுதி கொண்டிருந்தேன். காரணம் என் உயிர் பிரியவில்லை என்பதை அந்த குரல் கேட்டதில் இருந்து தெரிந்துகொண்டேன்.

நான் மோதியது வாட்ச்மேன் மேல் தான்..நான் மோதிய அதிர்ச்சியில் அவர் அலறிய சத்தம் கேட்டு முதல் தளத்தில் இருந்த என் நண்பன் அலறியடித்து கொண்டு ஓடி வந்தான். கீழே நான் விழுந்துகிடப்பதை அறியாத அவன் என் கால் தடுத்து அதே அலறலோடு விழுந்தான்...அந்த குரல் தான் எனக்கு நினைவூட்டியது..உயிர் இருபதனை..

விழித்தேன்...புறப்பட்டேன்..பயத்தை வெளிக்காட்டவில்லை...மனித இயல்பு..

உனக்கு ஆயுசு கெட்டி டா.. எனக்கு  நானே கூறிக்கொண்டேன்..

"அப்படியா",என்று  சிரித்தது அதே குரல்.

Comments

Post a Comment