என் அன்பு காதலியே,
உன்னில்
என்னை தொலைத்து இன்றோடு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆயினும் நம் இருவரை
பிணைத்திருக்கும் அன்புக் கயிறு இன்னும் அவிழ வில்லை; ஆழமாகி இருக்கிறது என்பதில் பெருமிதம்.
உன்னோடு பேசுகையில் இன்றும் அந்த முதல் பேச்சின் பதட்டம் – நெஞ்சோடு தான்- வெளியில் காட்டியது
இல்லை நான்.
உனக்கு நினைவிருக்கும் என
தெரியும். இருந்தும் என் மனம் அதை மீண்டும் மீண்டும் சொல்லிக் காட்டி, அந்த இனிய நினைவலைகளில் மிதக்க ஆசை கொள்கிறது.
கல்லூரி முதல் நாள், முதல் வகுப்பு, உள்ளே நீ நுழைந்தாய், எல்லா ஆண்களும் உன்னை கழுகின் பார்வைக் கொண்டு பார்த்தனர்; நானும் பார்த்தேன். அப்பொழுதே என் நெஞ்சினில் அமர்ந்தாய்; ஆனந்தம் கொண்டேன். என் அருகிலே வந்து அமர்ந்தாய், சொல்லவா முடியும், அளவறியா பேரானந்தம்.
கல்லூரி முதல் நாள், முதல் வகுப்பு, உள்ளே நீ நுழைந்தாய், எல்லா ஆண்களும் உன்னை கழுகின் பார்வைக் கொண்டு பார்த்தனர்; நானும் பார்த்தேன். அப்பொழுதே என் நெஞ்சினில் அமர்ந்தாய்; ஆனந்தம் கொண்டேன். என் அருகிலே வந்து அமர்ந்தாய், சொல்லவா முடியும், அளவறியா பேரானந்தம்.
பல காதல் கதைகளில்
படித்திருக்கிறேன், ஒரு இதயம் அதன் துணையை எப்படியோ கண்டுக்கொண்டு அதனை துடிப்பின்
வேகத்தை அதிகரித்து உணர்த்திவிடும் என்று. அதனை நம்பாமல் இத்தனை நாள்
சுற்றித்திரிந்த முட்டாள் தான் நான். அதற்காக அருகில் அமர்ந்தவுடனே, உன் திராவிட
நிற உடலை என்னோடு உரசி என்னை மேலும் துடிப்புக்குள்லாக்கினாய்; அது தான் இந்த
முட்டாளுக்கு நீ தந்த குறைந்தபட்சம்
தண்டனை என்று அறிந்தேன்.
எத்தனையோ பெண்களோடு
பேசியிருக்கிறேன். ஆனால் உன்னோடு பேச வேண்டும் என்று நினைக்க மட்டுமே முடிந்தது.
தானாக வந்து என்னருகில் அமர்ந்தவள் நீயாக பேசினாய். இன்னும் ஞாபகம்
இருக்கிறது,”என் பேரு..”என்று தொடங்கினாய். எனக்கு ஏன் இப்படி ஒரு இயலாமை என்று
வெட்கப்பட்டேன்; என்னிடமே நான் கோபப்பட்டேன். மன்னித்துவிடு, அன்று உனக்கு பதில்
கூறும் நிலையில் நான் இல்லை.
எப்படியோ, உன்னோடு பேசி
நட்பென்னும் ஆரம்ப நிலையை அடைந்தேன்; அதுவே எனக்கு பரவச நிலை தான். நீ பேசிய பல
வசனங்கள் என் செவியை அடைந்தனவே அன்றி மூளைக்கு செல்லவில்லை, அது உன் கண்களின்
காந்த விசையினால் விழ்ச்சியின் உச்சியில்
கிடந்தது. உன்னால் மட்டும் எப்படியடி முடிந்தது, தொண்டை வரை வந்த காதல்
தொடர்களுக்கு , நட்பென்று அர்த்தம் கொடுப்பதற்கு. திறமையடி உனக்கு, மிகுந்த திறமை.
சரி உன்னிடத்தில் சொல்லி விடுகிறேன் என்று முடிவு செய்து, வரும்படி உன்னை அழைத்தும் விட்டேன். எங்கிருந்து வந்ததோ
அந்த பயமும் பதற்றமும்; முதல் நாள் இருந்ததே, அதை விட பன்மடங்கு அதிகமடி அது. ஆனால்
அன்றைய தினம் என் நெஞ்சம் அதற்கென இரு காரணங்கள் வைத்திருந்தது. ஒன்று, ‘உன்னிடம்
முதல் நாளே நான் காதல் வசப்பட்டேன், இத்தனை நாட்கள் நட்பென்னும் மந்திர போர்வையில்
ஒளிந்துகொண்டு உன்னிடம் உறவாடினேன்’ என்று கூறப்போவதை எண்ணி பயம். இன்னொன்று,
ஒருவேளை நீயும் ஒப்புக்கொண்டால்?? அடுத்து என்ன செய்வது என்ற அச்சம்.
“திருமணம்!!” எவ்வளவு
பெரிய பேராசை என்று நம்மை நினைக்க வைத்துவிட்டார்கள் பல ஆயிரம் கால சதிகாரர்கள். மலையில் இருந்து கிளம்பி காதல் அருவிகள்
ஆற்றுப்பட்டு சென்று கொண்டிக்கும் நேரம், சாதி, மதம், இனம், நிறம், பால் என எத்தனை எத்தனை அணைகளை தான் கட்டுகிறார்கள்.
அவர்கள் சோறுன்ன கடலிடம் காதல் கொண்ட நதியினை தடுப்பதா?? எங்கள் காட்டில் மழை என்றால்,
உங்கள் அணைகள் உடைந்து போகும், நதிகளும் கடலோடு கலக்கும்.
உன்னிடம் என் மனதை
திறந்து காட்டினேன், பயத்தோடு தான். ஒருவேளை நீ இந்த சதிகாரர்களை கண்டு பயந்து
என்னை நிராகரித்துவிட்டால்? இந்த சமூகம் நம்மை போன்றவர்களை வாழ விடாதா? ஒவ்வொரு
திரைப்படம் பார்க்கும்போதும் என் மனம் ஏங்குகிறதடி, அதில் நம்மை போன்ற ஒரு காதலரை
காட்ட மாட்டார்களா என்று. ஒவ்வொரு முறை இந்த சமூகத்தின் பிடியில் சிக்கி கொள்ளும்
நிலையில், என் மனம் அளப்பரிய கோவம் கொள்கிறது. அந்த கடவுளை கொன்று விட்டு சிறை
செல்லவும் துணிந்து விடுகிறேன்.
அன்று
நீ என்னிடம் கூறிய வார்த்தைகளை நான் எண்ணாத நாளில்லை. “நாம் ஏன் வெட்கம் கொள்ள
வேண்டும். படங்களில் காட்டவில்லை என்பதால், நம்மிடம் இருப்பது காதல் ஆகாதா?? இலக்கியம் கூறாமல் மறுத்ததால், நாம் இலக்கண பிழை
என்றாகி விடுவோமா?? இந்த சமூகம் நம்மை போன்ற புற்களை எரித்து குளிர் காய்ந்தது போதும்!!
வெறும் புற்கள் அல்ல நாம் முட்கள் என காண்பிப்போம்!!” என்று நீ எழுச்சிக்கொண்டு
வீர வசனம் ஆற்றியதை நான் மறக்கவில்லை தான்.
எனினும், நீ துணிந்து ஏற்றுக்கொண்டாய். ஆனால் இவர்களுக்கு பயந்து எத்தனை எத்தனை காதலர்கள் மனதினை பூட்டி வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்த நிலை மாற வேண்டுமடி தோழி.
சுப்ரீம் கோர்ட் ஏற்றாலும், சுய அறிவு இல்லாத இவர்கள் நம்மை ஏற்க தயங்குகிறார்கள். என் ஆசை எல்லாம் ஒன்று தான், ஒன்றாக கை கோர்த்து ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை..’ என்று நம்மவரையும் இந்த சமூகம் கொண்டாட வேண்டும் என்று தான்.
சுப்ரீம் கோர்ட் ஏற்றாலும், சுய அறிவு இல்லாத இவர்கள் நம்மை ஏற்க தயங்குகிறார்கள். என் ஆசை எல்லாம் ஒன்று தான், ஒன்றாக கை கோர்த்து ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை..’ என்று நம்மவரையும் இந்த சமூகம் கொண்டாட வேண்டும் என்று தான்.
இப்படிக்கு, காதல்
எத்தகைய உருவில் வந்தாலும் ஏற்கும் சமுகத்தை காண துடிக்கும், உன் அன்பு,
மாதவி.
Comments
Post a Comment