Skip to main content

பொட்டப் புள்ள


இது அவனது முதல் கொலை. இதுவே அவனது இறுதி கொலையாக அமையவே அவனும் இந்நேரம் எண்ணிருப்பான். கொலை செய்ய உபயோகித்த கத்தியை எங்கே போட்டிருப்பான் என்று தெரியவில்லை, அவன் நினைப்பது சரியாக இருந்தால் அதனை விக்னேஷின் மார்பிலும் விலாவிலும் குத்தி எடுத்தவுடனே கீழே போட்டிருக்கவேண்டும்.
ஏதோ தவறு செய்து விட்டோமோ என்று ஓர் ஓரம் ஓர் எண்ணம். அவன் இருந்த நிலையில் ‘ஆஆஆ...!!!’ என்று பலமாக கத்த வேண்டும் போல மனம் குமுறியது.
ஆம்புலன்ஸ், இருளையும்  மழையையும் காற்றையும் கிழித்துக்கொண்டு வேகமாக சென்றது. ஓர் உயிர் பிரிவதற்கு ஆயத்தமாகி இறுதி சுவாசத்தை சுவைத்துக்கொண்டிருக்கும்  அதே நேரம் இன்னொரு உயிர் முதல் சுவாசத்தை எதிர் பார்த்து காத்துக்கொண்டிருந்தது. அது விக்னேஷிக்கும் மாதவிக்கும் பிறக்கவிருக்கும் முதல் பிறவி.  
ஒன்று ஆம்புலன்சில், இன்னொன்று குத்துயிரும் குலையுயிருமாக இவனால் தள்ளப்பட்ட அதே இடத்தில்.
மாதவி முருகனின் கையை மிகவும் வலுவாக பிடித்துக்கொண்டிருந்தாள்; அது எப்படி விக்னேஷை கொன்ற அவனே அவர்களது மகளை (மகளாக இருக்க வேண்டும் என்பது அவர்களது பலநாள் பகற்கனவு) பெற்றெடுக்க துணைவான் என்ற நம்பிக்கை பிறந்ததோ அவளுக்கு.
அவள் பிடியின் கனல், முருகனின் கண்ணில் வழியும் கண்ணீரிலும் பிரதிபலித்தது. என்ன நடக்கிறது என்று நின்று சிந்தித்துப்பார்க்க வழியில்லாமல் வேகமாக நடந்து விட்டது.
குத்திவிட்டு அவன் ஓடியிருந்தால், இதிலெல்லாம் அவன் சமந்தப்படாமல் போயிருப்பான்.
விக்னேஷ் சுருண்டு விழும் முன்பே, வீட்டிற்க்கு வெளியே வந்து நின்றாள் மாதவி. அவள் முதலில் விக்னேஷை பார்க்காமல் முருகனையே பார்த்தாள். அச்சமும் அதிர்ச்சியும் கண்ணீரில் கலந்து  இருவர் கண்களிலும் தேங்கியது. இவன் சிவந்த கண்களில் ஏன் கண்ணீர் வந்தது, ஒருவேளை மாதவியின் தோற்றம் அவனது நிறைகர்ப்பிணி மனைவியின் ஞாபகம் தோன்றி இருக்கலாம்!!
திடீரென அவள் சுவற்றை தேய்த்துக்கொண்டு ‘ம்மா!!’ என்று அலறியபடியே கீழே உட்கார்ந்தாள். தூண்டில் புழுவென துடித்தாள்; துடித்தார்கள்!
உழவுக்கு பழகிய நிலமெலாம் வாழிடங்களாக மாறி வரும் பகுதி. தங்கள் காதல் திருமணத்தை நடத்திய கையோடு புது மனை தேடி புறநகர் வந்து விட்டது  இந்த இணை. அங்கங்கே வீடுகள், குரல் கொடுத்தால் கேட்க வாய்ப்பு குறைவு தான். வேறு வழியில்லை என்று எண்ணினாளோ என்னவோ, அழுகுரலோடு ‘அண்ணா’ என்று  அழைத்தாள் அந்த பெண்.
அருகில் செல்ல அவன் சற்றும் யோசிக்க வில்லை, சொல்லப்போனால் அவன் ஒரு கொலையாளி என்பதையே மறந்து விட்டான். பதறி அடித்துக்கொண்டு பக்கத்தில் சென்றான், அந்த கொலையை செய்ய அவ்வளவு பதறினானா என்று தெரியாது. அவன் கைகள் நடுங்கின, கால்களும் ஒரு நொடிக்கு மேல் தரையை தழுவவில்லை, சுற்றும் முற்றும் ஓடினான், ஆனால் அதே இடத்தில்.
அவளால் வலி பொறுக்கவில்லை, கண்ணீர் காட்டிகொடுத்தது. துடித்தாள்! தாங்குவதற்காக கீழே இருந்த அவள் இரு கைகளும் ‘ப்ளீஸ்’ என்பதாக ஒன்று சேர முயற்சித்தது, முடியவில்லை அவளுக்கு ஆதரவு தர மறுபடியும் சென்று விட்டன. மறுபடியும் அவள் சிரமமுடனே ஒரு கையை உள்ளே போன் இருக்கும் இடத்தை காண்பித்தாள், “ப்ளீஸ் அண்ணா”. அவளின் வார்த்தைகள் அவன் காதில் சென்று மூளையில் எதிரொலித்தது.
உள்ளே வயது தாண்டிய மூதாட்டி, அவளின் நோய் என்னவென்று தெரியாது. நகர முடியவில்லை, உட்காந்த படியே துடிக்கும் கன்னங்களாலும் கண்ணீர் கசியும் கண்களாலும்  அவனை கெஞ்சியது, ‘அவர்களின் கனவை காப்பாற்றிவிடு’ என்பது போல அவனுக்கு தோன்றியது.
ஆம்புலன்ஸ் வர தாமதமாகியது, அவனுக்கு காரும் ஓட்ட தெரியாது. அவனால் அவள் வலியை பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் நிதானமாக இருக்க முடியவில்லை. சட்டை பையில் இருந்து மிச்சமிருந்த ஒரே ஒரு பீடியை எடுத்தான், மழையில் நனைந்த அது அவனை மேலும் துன்பத்தில் ஆழ்த்தியது.
ஆம்புலன்ஸ் வந்தவுடன் அதனில் அவளை ஏற்றியவர்கள் அவனையும் உடன் அழைத்தார்கள். அவனுக்குள் ஏதோ ஓடிக்கொண்டிருக்கும்போதே அவள் கண்ணீர் மொழியினில், ‘வாங்கனா..ப்ளீஸ்’ என்று கெஞ்சினாள். அவனுக்கு யாரோ நெஞ்சை பிழிகிற போல் இருந்தது.
உள்ளே ஏறி அமர்ந்தவுடனே அவள் ஒரு ஆதரவுக்கு அவனுடைய கையை கெட்டியாக பிடித்தாள். அவனுக்கு ஏதோ தயக்கம் கலந்த அதிர்வு. சாதரணமாக ஒரு ஆணை ஒரு பெண் தன் கையினால் பிடிப்பதால் ஏற்படும் தயக்கம் அல்ல. இவர்களை தொடக்கூடாது என்று கூறி தள்ளி வைத்த சமூகம், இன்று இவனின் கையை தொட்டதால் ஏற்ப்பட்ட அதிர்வு!!
அவள் கையின் அழுத்தம் இவன் கையில் பதிகிற அளவுக்கு இருந்தது. அத்தகைய அழுத்தத்தை அவன் உணர்வது இதுவே முதல் முறை.
அவனுடைய மனைவியிடம் இருந்து அவனுக்கு பல அழைப்புகள் வந்து விட்டன. அவன் எதையும் எடுக்கவில்லை. காரணம், அவளுக்கு இவன் கொலை செய்ய வந்த நோக்கம் தெரியாது. ஒரு வெளியூர் நண்பனிடம் பிறக்க போகும் பிள்ளை செலவுக்கு பணம் வாங்கி வர செல்வதாக கூறிவிட்டு சென்றவன்.
உள்ளூர் நண்பன் ஒருவன் ஒரு பெரியவரிடம் அழைத்து சென்றான். மூளை சலவு செய்யவதில் ஆஸ்கார் வாங்கிருப்பன் போலும்.
கொலை செய்ய வேண்டியது ஒரு பார்பனர் என்பதால் ‘சாமி குத்தம் ஆயிட போகுது’ என்று யாரும் முன் வரவில்லையாம். இவனோ படிப்பறிவில்லை என்றாலும் கேள்வி ஞானத்தால் பகுத்தறிவு கருத்துகளை அறிந்தவன். ‘நீ தான் பார்பானுக்கும் நமக்கும் நூல் அளவு தான் வித்தியாசம்னு கருத்து பேசுவியே மாமா’ என்று அவனை தூண்டி விட்டான்.
தனக்கு பிறக்க போகும் பிள்ளையை, அது ஆணோ பெண்ணோ, படிக்க வைக்க வேண்டும் என்பதே அவனின் வாழ்கை லட்சியம். அவனுக்கு பகிரங்கமாக கத்த வேண்டும் போல இருந்தது. அவனின் லட்சியம் விலைபேசப்பட்டது.
அவளின் இறுகிய கைப்பிடி அவனுள் இருந்த சாதி காழ்ப்புணர்ச்சியை தவிடுபொடியாக்கியது. இனியும் அந்த ‘பழைய’ நண்பனின் தொடர்பு கொள்ள மாட்டான்.
மருத்துவமனை வந்தது. அவன் வரவேற்ப்பு பகுதியிலே நின்று விட்டான். அவளை பிரசவம் பார்க்கும் அறைக்கு கொண்டு சென்றார்கள். ஒரு முறை அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள், அவனுக்கு நெஞ்சில் யாரோ கை வைத்து அழுத்துவதை போல் இருந்தது. அவளின் உருவமும் அழுகுரலும்  கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தன.
தொலைக்காட்சியில் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.
ஏதோ கிராமத்தில் (அது அவன் காதில் சரியாக விழவில்லை) விக்னேஷ் என்பவர் மர்மமான முறையில் அவரது வீட்டிற்க்கு வெளியே கொலை செய்யப்பட்டு கிடக்கிறார் என்றும், அவருடைய கர்ப்பவதி மனைவி காணவில்லை என்றும் அவர்களது உறவினர் ஒருவர் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார் என்றும் செய்தி வாசித்தார் பெண்மணி ஒருவர்.
அந்த உறவினர் செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்தார், அதில் “அவங்க ரெண்டு பெரும் இன்டெர்-காஸ்ட் மாரஜ் பண்ணிக்கிட்டாங்க சார், அந்த பொண்ணு ஒரு பிராமன குடும்பம், அவரு செட்யுல்ட் காஸ்ட். அது ரெண்டு பாமிளிக்கும் புடிக்கல. இவங்க பகுத்தறவு கருத்து பேசுறவங்க சார். இதெலாம் பிடிக்காத யாரோ தான் இத பண்ணிருக்கணும். நான் அவரோட பிரன்ட் சார், என்னோட அம்மாவை இவங்க வீட்டுல விட்டுட்டு நான்  சென்னை போயிருந்தேன், இப்போ வந்து பார்த்தேன் வெளியவே இப்படி கெடக்குறாரு..” இன்னும் தொடர்ந்தார்.
அவனுக்கு அப்பொழுது தான் தான் செய்த வேலை மின்னல் வேகத்திற்கு மூளையை எட்டியது. அவர்கள் கொலை செய்ய சொன்னது அந்த பெண்ணை தான், வீட்டிற்கு வெளியே இவனை கத்தியுடன் விக்னேஷ் பார்த்து விட்டதும், அதற்கு பிறகு நிகழ்ந்தவைகளை கண்முன் நிழற்படங்களாக ஓட்டினான்.
உழைத்த பருத்த கைகள் நடுங்க, சிவந்த கண்கள் கண்ணீர் கக்கின. குற்றவுணர்ச்சி பொறுக்க முயலாமல் செய்வதறியாது வரவேற்ப்பு பகுதியின் இங்கும் அங்கும்  நடந்தான். மனம் ஏதோ சொல்ல மனைவிக்கு ‘போன்’ செய்தான்.
‘சார், பெண் குழந்தை சார்’ என்றார் செவிலி ஒருவர். ‘மச்சான், பொட்டபுள்ள பொறந்துருக்கு மச்சான்’ என்றான் தொலைபேசியில் அவனுடைய மச்சினன்.
மருத்துவனை வெளிய வந்தவன், சுற்றி இருப்பவர் இவனை ‘பைத்தியம்’ என்று என்னுமாறு ‘ஆஆஆஆ....!!!!’ என பலமாக கத்தினான்; மரத்தில் இருந்த காகங்கள் அலறிக்கொண்டு கூட்டத்தோடு பறந்தன.  யாரையும் அவன் கண்டுகொண்டானில்லை.
அவனின் துன்பமும் இன்பமும் அந்த கதறல் ஒலியோடு ஒழிந்தது போல் இருந்தது.

Comments