Skip to main content

மௌனம் விலகியது



அந்த மௌன இரவில், அவனால் எப்படி சாத்தியமாக்க முடிந்தது? எந்த ஒரு கதறல் ஒலியும் ஏற்படாதவாறு எப்படி கொலைச் செய்ய முடிந்தது? கொலைத்தொழிலில் கைத்தேர்ந்தவன் அல்லன் என்பதை கிலிப் பிடித்து நடுங்கும், அவன் கத்தி பிடித்த இடது கை காட்டிக் கொடுக்கிறது. ஏதோ சாஸ் டப்பாவை கீழே தட்டி விட்டாற்போல் தரையெங்கும் சிவப்பு மாயம். அவன் அதனைப் பார்க்கிறானா அல்லது  ‘அட! அழகான வெள்ளைச் சட்டை கறைபிடித்ததே!’ என்ற எண்ணத்தில் காண்கிறானா என்றெல்லாம் தெரியாது. ஆனால் தலையை குனிந்தபடியே வைத்திருந்தான்; நாம் பெண்களிடம் எதிர்பார்ப்போமே, அதே மாதிரி தான்.
***
கொலை நடந்த அன்றைய தினத்தின் காலை. சேவலோ கோழியோ கூவி எழுப்பவில்லை; அது சுந்தரின் அலார்ம் டோன். நவநாகரிக வாழ்க்கையில் நடுநிசி ஏழு மணிக்கெல்லாம் எழுந்துக் கொள்ள வேண்டும் என்றால் அலார்ம் தேவை தானே.
வழக்கமாக விடியும் முன்பே எழுந்துவிடும் சாவித்ரி விடுமுறை தினம் என்பதால் சுந்தரின் அலார்ம் ஒலியிலே கண் விழித்தாள். சுந்தரின் பக்கம் திரும்பி ‘குட் மார்னிங்’ என்றாள், அவனோ முகத்தை திருப்பிக்கொண்டு போகிறான். இன்னும் கோவம் தீரவில்லை போலத்தெரிகிறது. எப்பொழுதும் காலை காற்றோடு கரைந்துவிடும் அவரின் கோவம் இன்றோ இன்னமும் தொடர்கிறது.
முந்தைய நாள் மாலை பொழுதில் ஏற்பட்ட அவரின் அமைதிநிலை இன்னும் கலையவில்லை. ‘என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு?’ என்று தனக்குள் சொல்லியபடி நாளின் வேலைகளில் தன்னை செலுத்தினாள்.
‘சரி, எப்படியும் அவன் பேப்பர் படிக்கிற சமயம் பார்த்து, அவன் பக்கமா உக்காந்தா  அரசியல் ‘விவாதம்’ நடத்த வாய் ஆட்டோமாடிக்கா ஓபன் ஆகிறப் போகுது’ என்று காப்பியோடு போனவளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இன்றைய பேப்பர் இன்னும் அவன் கைகளில் சேரும் பாக்கியம் பெறவில்லை; பெஞ்சில் அப்படியே கிடந்தது.
‘காலை எழுந்தவுடன் படிப்பு’ என்ற இந்த பாரதி பக்தரை இன்று வேறு ஏதோ ஒரு வெள்ளைத்தாள் ஆட்கொண்டது. அது முந்தைய நாள் மாலையில் தெருவோரம் சைக்கிள்கடை பையன் வந்து தந்துவிட்டு போனது. ‘தெரு முக்குல ஒரு அண்ணன் உங்களாண்ட இத குடுக்கச்சொல்லி தந்ததுச்சு’ என்று நீட்டிய அந்த கணம் முதலாய் இவன் அதனை விட்டு நீங்கினான் இல்லை.
‘அப்படி அதுல என்ன ரகசியம் எழுதிக் கெடக்குதோ, அதையே பிடிச்சிட்டு தொங்குரிங்க’ என்று முனுமுனுத்தபடி அவ்விடத்தை விட்டு அகன்றாள் சாவித்ரி. சுந்தர் அதை எத்தனை முறை படித்திருப்பனோ; கணக்கில்லை. ஆனாலும் அவள் சென்றதும் சுதந்திர பறவையாய் அதனை மீண்டும் படிக்கலானான்.
அன்புள்ள என்று தொடங்கிய அந்த ‘லவ்’ லெட்டரில் பெறுநர் பெயரினை கருப்பு கிரீஸ் மறைத்திருந்தது. அந்த பொடியனை மனதில் திட்டினான். அதை கடந்துவிட்டு அந்த லெட்டரின் உயிர் பகுதிக்கு வந்தான்.  
‘உன்ன நான் காலேஜ் டைம்ல இருந்தே ஃபாலோ பண்ணிட்டு, என் லவ்வ உன்னான்ட சொன்னேன். நீயும் எதுவும் நடக்காத மாதிரி காட்டிக்கிட்டே காலேஜ் முடிச்சிட்டு கெளம்பிட்ட. நானும் சரி காலேஜ் முடிஞ்சி பிரிஞ்சு போயிட்டா அப்படியே உன்ன மறந்துட்டு என் பொழப்ப பாக்கலான்னு தான் நெனச்சேன். ஆனா முடில.
அரியர் எழுத அந்தப் பக்கம் போனேன். பெரிய ரோட்டு மேல நடக்குறப்போ உன்ன பயந்து பயந்து பாத்தது எல்லாம் ஞாபகம் வருது. எக்ஸாம் ஹால் போன அப்புறமும் கூட படிச்சதெல்லாம் தொரத்தி அடிச்சிட்டு நீ தான் மூளைக்குள்ள முன்னாடி வந்து நிக்குற.
நம்ம என்னால என்னோட பொழப்ப பாக்க முடியல. மனசுல உக்காந்துட்டு டார்ச்சர் பண்ற. எனக்கு உன்ன மறுபடியும் பாக்கனும். அதான், உனக்கு கல்யாணம் ஆய்டுச்சுன்னு தெரிஞ்சும் லெட்டர் குடுத்தேன்.
உனக்கும் என்ன பாக்கனும்ன்னு ஆச இருந்தா, அதே பொடிப்பையன் கிட்டையே தூது விடு. இப்படிக்கு  உன்னோட காதலன்.’ என்று தங்கிலிஷ் மொழி பேசியது அந்த லெட்டர்.
முதல் முறை படிப்பதுப்போல் முழுதாகப் படித்தான். பிறகு என்ன தோன்றியதோ, பழைய தமிழ் சினிமா வில்லன் கதாப்பாத்திரம் போல் ஆவேசமாக சிரித்தான். ‘பதிலுக்கு ஒரு கடிதம் போட்டே ஆகணுமே என் சகலைக்கு’ என்று மனதில் சொல்லிக்கொண்டு ஒரு வெள்ளைத்தாளில் எழுதினான்:  ‘மாலை ஐந்து மணிக்கு மேல் வீட்டிற்கு வரவும்’ என்று வெறுமையாக.
சாவித்ரி போட்டு வைத்த ஆறிப்போன காப்பியை ஒரே ‘கல்ப்’ அடித்துவிட்டு, அப்பொழுதே சென்று அந்த பொடியனிடம் “என் வீட்ல குடுத்தாங்கன்னு சொல்லி குடுத்துடுடா பையா!” என்று அவன் அழுக்கு படிந்த கையில் அந்த சீட்டுடன் பத்து ரூபாயும் வைத்து அழுத்தினான். அந்த சிறுவனின் இருண்ட முகத்தில் வெண்முத்துக்கள் பளிச்சிட்டன.
‘அது எப்படி எனக்கு தெரியாம அவள ஒருத்தன் காலேஜ்ல அவள லவ் பண்ணிருக்கான். இவளும் ஏதும் சொன்னது கெடையாதே! நம்ம தான் மூணு வருஷம் பின்னாடி சுத்துனோம். சொல்றதுக்கு கூச்சப்பட்டே சொல்லாம விட்டுடோம்.
ஆண்டவன் புண்ணியம் ஒரே சாதியா வேற போய்டோம். அவ வீட்டுல மாப்ள பாக்குற நேரம் பாத்து கொஞ்சம் நம்ம மூளைய பயன்படுத்தி கல்யாணத்த நல்லபடியா முடிச்சி, இதோ வர்ற மே மாசத்தோட ரெண்டாவது வருஷம். வீட்டுக்கு போய் அவள ஒரு கை பாத்தா உண்மைய கக்கிடப்போறா!!’ என்று அன்ன நடை போட்டு வந்தவன், பாதி வழியில் ஞானோதயம் உதித்து வேகமெடுத்தான்.
வீட்டிற்க்கு வந்ததும் வேலையை தொடங்கினான். சமையல் அறையில் இருந்த அவளின் கையை பிடித்து கூடம் வரை இழுத்துக்கொண்டு வந்து விட்டவன், அவளின் கதறலோடு எழும் எந்த கேள்விக்கும் பதில் கூறாமல் கன்னத்தில் மாற்றி மாற்றி அறைந்தான்.
இது வரை அவர்கள் இருவருமே அப்படி ஒரு வன்முறை காட்சியை எந்த ஒரு  சினிமாவிலும், எந்த ஒரு தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் கண்டதில்லை. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினரையும் வசைப்பாடி அனுப்பி வைத்தான்.
“சொல்லுடி யாரு அது உன்ன காலேஜ் டைம்ல லவ் பண்ணது. லெட்டர் போட்டுருக்கான் பாரு உனக்கு அவன். உண்மையச் சொன்ன உசுரோட விடுறேன். இல்லாட்டி சோறு தண்ணி இல்லாம பட்டினி போட்டு கொன்னுபுடுவேன்.” என்று மறுபடியும் கை வலிக்கும் வரை அடித்தான்.
அவளுக்கு என்ன நடக்கிறது என்று சிந்திக்கக்கூட நேரம் தராமல், கிடைத்த கொஞ்சம் நேரத்தை அவனே அடிப்பதிலும் அறைகூவலிலும் செலவழித்தான் என்பதால், புயல் அடித்து ஓய்ந்த நேரம் அவள் ஓரமாக அமர்ந்தபடி யோசித்தாள். அவள் எண்ணத்தில் எதுவும் மாட்டவில்லை.    
‘நம்ம காலேஜ் படிக்கும்போது லவ் பண்ணுனோம், சரி; ஆனா இவன் யாரு புதுசா? ஏற்கெனவே இந்த பாழாப்போன மனுசன கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் அல்லல் பட்டுட்டுக் கெடக்கேன். இதுல புதுசா இவன் வேற என்னத்தையோ குண்டு போட்டுட்டு போறான். இப்போ தான் ஆரம்பிச்சிருக்கு, வெடிச்சு முடிக்க எவ்வளவு நாள் எடுக்குமோ ஆண்டவா!’ என்று கையை குவிக்க தான் எண்ணினாள், பாவம் இயவில்லை!
ஆனால் இவள் எவ்வளவோ பரவாயில்லை. இந்தியாவில் இரண்டில் ஒரு பெண்ணிற்கு ரத்தசோகை என்கிறார்கள். இவள் இன்னும் கூட மயக்கம் கொள்ளாமல் நிலைத்திருக்கிறாள் என்றால், அசாத்திய உடல்வலு பெற்றவள் தான்!
இப்படியே நினைப்பதிலும், அடிக்கடி அழுவதிலும், களைப்பின் பயனாய் உறக்கம் கொள்ளுவதிலும் மதியம் பொழுது கடந்துபோனது. பசித்தது! டீ போட்டு குடித்தாள். அவனுக்கும் கொண்டு சென்று கொடுக்க நினைத்து வெளியே வந்து பார்த்தால், சோபாவில் அடித்த களைப்பினால் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.
அன்றாட வாழ்வின் நிகழ்வுகளில் நுழைந்தாள்.
மாலை நெருங்கியது.  உறக்கம் கலைந்தவன் முகம் கழுவி விட்டு கடிகாரத்தின் மேல் கண் வைத்து இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
5 மணி!
சாவித்ரியின் போன் அலறியது, அவளின் தோழி தான் அழைத்தாள்!
டோர் பெல் கூடவே அடித்தது! சுந்தர் எந்த ஒரு பதட்டமும் காட்டாமல் கதவை திறக்க செல்லுகையில், சாவித்ரி போனை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.
‘அட! ச்சே நாயே! நீ தானா’ என்று இன்சொற்களால் விருந்தோம்பல் செய்து உள்ளே உட்காரச்செய்தான். ‘சாவி! பன்னீர் வந்துருக்கான் பாரு!’ என்றான், சிரித்துக்கொண்டே!
அவள் ஒரு தோளில் போன் வைத்து காதருகில் சாய்த்தபடி பேசிக்கொண்டே குடிக்க ஒரு கிளாஸ் தண்ணீரும் காலி கிளாஸ் இரண்டும், ஒரு ஆப்பிளும் அதை அரிய கத்தி ஒன்றும் வைத்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றுவிட்டாள். சுந்தர் சிரித்துக்கொண்டே, ‘இவ இப்படித்தான் எதாச்சும் குறும்புதனமா பண்ணிட்டு இருப்பா’ என்று க்ளாசில் தண்ணீர் ஊற்றி குடிக்க கொடுத்தான்.
வருடங்கள் கழித்து சந்திக்கும் தோழனிடம் இவன் மணிக்கணக்கில் பேச; ஆண்டுகள் கழித்து அழைத்த தோழியிடம் இவளும் அளவில்லாமல் பேசினாள். தான் எதற்காக கடிகாரம் மேல் விழி பதித்து அமர்ந்து இருந்தோம் என்பதை அவன் மறந்தே போயிருந்தான்.
கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் பேசிக்கொண்டே கூடத்திற்கு வந்தாள். தோலின் துணையை விட்டு போன் கீழே விழுந்தது.
வாயில் சொற்கள் வராமல் தொண்டையிலே சிக்கிக்கொண்டன.
சிவப்பு நிற கடலில் சுருங்கி விழுந்து அசைவற்றுக் கிடந்தது சுந்தரின் உடல். எப்படி எந்த ஒரு சத்தமும் இல்லாமல் இவனால் ஒரு கொலை செய்திருக்க முடியும்!
செய்வதறியாது சிலை போல் நின்றாள் சாவித்ரி. குனிந்திருந்த தலை நிமிர்ந்தது, ‘நீங்க கூட யாரையோ லவ் பண்ணிங்கலாமே! சந்தோசமா போய் அவன் கூடவே வாழுங்க!
பாஸ்டர்ட் இவன் தான் லவ் சொன்னா தப்பு தப்பா பேசிட்டான். நீங்க போங்க சந்தோசமா இருங்க!’ என்று கூறிவிட்டு தரையை பார்த்து சிரித்தான், பன்னீர்.
அவள் விழுந்தும் உடையாமல், தொடர்பும் துண்டிக்கப்படாமல் இருக்கும் போனை காதில் வைத்தாள். அவள் பேசிக்கொண்டு தான் இருந்தாள்: ‘ஏய் மச்சி! சொல்ல மறந்துட்டேன் டீ. நம்ம படிக்கும்போது பன்னீர்ன்னு ஒரு பையன் இருப்பானே! அவன் காலேஜ் படிக்கும்போதே யாரையோ ஒரு பையன ஒருதலையா லவ் பண்ணுனானாம். லெட்டர் குடுத்துருக்கான், அப்போவே அந்த தருதல‌ இவன அசிங்கப்படுத்தி அனுப்பிட்டானம். இப்போ என்னடான்னா, அவன கொல்லப்போறேன்னு லெட்டர் எழுதி கூட படிக்கிற எல்லா பசங்களுக்கும் லெட்டர் போட்டுருக்கானாம் மச்சி! நம்மப் பயலுக பேஜார் ஆயிக்கிடக்குறானுங்க!’ என்று அவள் பேசிக்கொண்டு இருக்கும்போதே சாவித்ரி துண்டித்தாள்.  வேறு யாருக்கோ போன் போட்டு, “மாதவி! ஐ வான்ட் டு லிவ் வித் யு!” என்றாள்.
‘போங்க சந்தோசமா இருங்க!’ என்று மீண்டும் கூறிவிட்டு சிரித்தான். அவனின் சிரிப்பொலி சிவப்புத் தரையில் பட்டு எதிரொலித்தது; இரவின் மௌனம் விலகியது!  

Comments