அன்றைய விழிப்பும் அவனுக்கு பரபரப்பாகத் தான் அமைந்தது; வியர்வைத் துளிகள் உடல் முழுதும் அலங்கரித்தன. பயத்தின் களை முகத்தில் பிரதிபலித்தது. ஏற்கெனவே களைந்துபோய் பைத்தியக்காரன் என்று இவன் நண்பர்கள் கிண்டலடிக்க தூண்டும் இவனது தலை முடியின் நிலை இப்பொழுது மேலும் கவலைக்கிடம்.
“என்னா மச்சான் இன்னிக்கும் அதே கனவா?” என்றான் சாய். ‘ஆமாம்’ என்றது போல தலையை ஆடிவிட்டு இயற்கையின் அழைப்பை ஏற்க்கச் சென்றான் காமேஷ்.
இவர்கள் தாம்பரத்தில் வீடு எடுத்து தங்கியிருந்தார்கள்; இவர்கள் என்றால் சாய், காமா மற்றும் அருண். ஆனால் இன்று நான்கவதாக ஒருவன் சாயுடனும் அருணுடனும் சீட்டு ஆடிக்கொண்டிருந்தான். விடுமுறை நாட்களில் இவர்களிடம் விருந்தாளிக்குப் பஞ்சமில்லை.
கனவு என்று கூறிவிட்டு ‘என்ன கனவு’ என்ற முடிச்சியை அவிழ்க்காமல் இருப்பது விருந்தோம்பல் ஆகாது. ஆதலால் விளக்கினார்கள்
பள்ளியின் சுகம் அனுபவித்துக்கொண்டிருந்த வயதில் காதலின் தென்றலால் கவரப்பட்டு, ஓராண்டு காலம் எந்த ஒரு சண்டை சச்சரவு வந்தாலும் சமாதான முத்தங்கள் உடனுக்குடன் பகிர்ந்துகொண்டு வாழ்வினை ரசித்துக்கொண்டிருந்த இவனுக்கு , காதலி சாலையின் பசிக்கு இரையாகிப் போனதை கண்முன் கண்டது பேரதிர்ச்சி; அதிலிருந்து அவனுக்கு ‘கார்’ வெறுப்புப் பட்டியலில் முதலாமிடம் பிடித்தது.
“அது நடந்து அஞ்சு வருசம் ஆச்சு, இன்னும் மீண்டு வரலை. என்னமோ திடிர்னு கொஞ்சம் நாளா அந்த ஆக்ஸிடென்ட் மொமென்ட் கனவு மாதிரி வருதாம்!”
“கொஞ்சம் நாள் சரக்கும் அடிக்காம இருந்தான். இந்த கனவு கருமத்துனால, அந்த கருமத்தையும் குடிக்கிறான்!”
“இதுல என்னா பிரமாந்தமுன்னா, இந்தா நாயையும் ஒரு பொண்ணு சுத்தி சுத்தி வந்துச்சு காலேஜ்ல. இவன் அவள மயிராக் கூட மதிக்க மாடிங்குறான். ஏன் மச்சி நம்ம லாம் நல்லா தான இருக்கோம், அப்புறோம் ஏன் நமக்கு மட்டும் ஏதும் அமைய மாட்டிங்குது??”
சீட்டு ஆடிக்கொண்டே சிரித்துக்கொண்டிருந்த நேரம், ஒரு போன் கால். “அவ தான் மச்சி” என்று அவன் அழைப்பை ஏற்றான்.
அவள் என்றால், ‘அனு என்கிற அனுஷா’. தினமும், ‘அவன் எழுந்துட்டானா?’ ‘அவன் சாப்டானா?’ ‘என்னா மச்சி பண்றான் அவன்?’ என்று அவளின் காதலை கேள்விகளாய் அருண் தான் கேட்டு வாங்கிக்கொள்வாள்.
“ஹலோ மச்சி!! இப்போ தான் எழுந்தான்”
“எப்டியும் மொனக் கடைக்கு டீ சாப்புடப் போவான்”
“சரி வந்துரு” என்று அணைத்தான்.
முகத்தை துணியால் துடைத்துக்கொண்டு, “என்னா மச்சி தண்ணியே வரல” என்றவன், “டீ குடிக்க போறேன் வர்ரிங்களா?” என்று ஓரிடண்டு வினாடிகள் நின்று பார்த்துவிட்டு, யாரும் வராததால் அவனாகவே சென்று விட்டான்.
***
அவன் தேனீர் குடித்துவிட்டு, சிகரட்டை மிச்சமின்றி உரிந்து நுரையீரலில் சேமித்தான். வீடு திரும்புகையில், “ஹாய் காம்ஸ்!” என்று அவள், இவனது அனுமதி கோராமலே கன்னத்தை கிள்ளினாள். ஒரு வெறுப்பு கணையை கண்களால் எறிந்துவிட்டு, கன்னத்தை தடவிக்கொண்டான்.
“உன்ன யாரு இங்க வரச் சொன்னா?”, அடுத்த கணையை சொற்களாக விடுத்தான்.
“அட நமக்குள்ள என்ன காம்ஸ், சொல்லிட்டு வர்ற அளவுக்கு நம்ம ரொம்ப தூரம் இல்லையே!”
“என்ன நமக்குள்ள?” என்று முறைத்துவிட்டு, “ஒழுங்கா ரூம் போய்ச் சேரு” என்றபடி நடையை தொடங்கினான்.
காதல் செய்வோருக்கு அசிங்கம் எதற்கு? பின்தொடர்ந்தாள்!
அழைப்பு வந்தது அவளுக்கு, ‘என் ரிங்டன் ஏன் நீயும் வச்சுருக்க’ என்று திரும்பி அவளிடம் கண்களாலே கேட்டு முடித்தான். அது யுவனின் இசையின் ஒரு பாடல்!
“அருண் தான் காம்ஸ்” என்று சிரித்துவிட்டு, “சொல்லு மச்சி, நான் வந்துட்டேன். அவன் கூட தான் இருக்கேன்! நான் பாத்துக்குறேன். யு டோன்ட் வொர்ரி! பாய் மச்சி” என்று சட்டென்று பேசி முடித்தாள். அருணும் இவளது கொஞ்சநெஞ்ச நேரத்தையும் கடன்பெற விரும்பவில்லை.
“ரிங்க்டோன் ஏன் மாத்துன?”, அவனால் கேட்காமல் இருக்க முடியவில்லை. “காதல் தோல்வி காம்ஸ்” என்றாள். “எனக்கு தான, நீ எதுக்கு?” என்று ஒரு வேகத்தில் கேட்டவன், உணர்ந்தவனாய் ‘ச்ச்’ என்றான்.
“உனக்கு எப்போல இருந்து இந்த பாட்டப் பிடிக்கும்” என்றாள், அவனிடம் எதாவது பேச வேண்டும் அவளுக்கு!
“அவள பாத்ததுல இருந்து!” என்றவன் கண்களில் கண்ணீர்த் துளிகளை அவள் கவனிக்காமல் இல்லை. இவளிடம் கண்ணீரை வெளிப்படுத்த விரும்பாதவனாய் வானுக்கும் பூமிக்குமாய் தலையை காட்டிக்கொண்டிருந்தான்.
“சரி! சரி! பீலிங்க்ஸ்க்குள்ள போகாத காம்ஸ்” என்று அவன் தோளில் கை வைத்தாள். அவன் தட்டிவிடவில்லை! ஒருவேளை ‘அவள்’ கைகளின் உஷ்ணத்தை ‘இவளிடம்’ உணர்ந்திருப்பான் போலும்!
“காம்ஸ், உனக்காக ஒரு கவிதை எழுதுனேன், கேளேன்” என்று சொல்லிவிட்டு தனது இரண்டு கைகளையும் கவிதை சொல்லுவதற்கு ஏற்றவாறு வைத்தாள்.
அவனுக்குள் ஆர்வம் இல்லை, ஆனாலும் வார்த்தைகளின் வருகைக்காக அவள் உதடுகளையே நோக்கினான்.
“சாரி காம்ஸ், எனக்கு வெக்கமா இருக்கு, உனக்கு நான் அப்புறம் சொல்றேன்” என்று தன் இரு கைகளால் முகத்தை மூடி தன்னைத் தானே சுழற்றினாள்!
அவர்கள் குடி இருக்கும் பிளாட் வந்தது. சாலையிலே நின்றுகொண்டு கைகளை கட்டியபடி அவளை பார்த்து, “வீடு வந்துருச்சு நீ கெளம்பு” என்றான்.
“என்னடா நான் உன்கூட இப்படியே பேசிகிட்டே கடைசி வரைக்கும் வாழ்க்கைய ரசிக்கலாம்னு பாத்தேன்; நீ வீடு வரைக்கும் தான்னு நிறுத்துற!”, என்று முகத்தில் கவலைக்குறி தோன்றக் கூறினாள். ஆனால் புறப்பட ஆயத்தமாகவில்லை.
“எதாச்சும் திட்டிறப்போறேன், ஒழுங்கா வீடுபோய் சேரு!”, என்று மறுமுறையும் விரட்டினான்.
ஒருமுறை மூச்சை உள்வாங்கிப் பெருமூச்சாய் வெளியிட்டவள், “நீ இன்னும் எவ்ளோ காலம் இப்டியே இருப்பன்னு நானும் பாக்குறேன்டா.” அவனிடம் எந்த ஒரு பதிலும் இல்லை.
“உன் பின்னாடி சுத்துறேன்ல, அதான் என் அருமை புரியல உனக்கு, நானும் இல்லைனா தான் தெரிஞ்சுக்குவ போல” என்று சொல்லிவிட்டு திரும்பினாள், சட்டென்று ஒரு ‘கார்’ காதை கிழிக்கும் அளவுக்கு ஒலித்துக்கொண்டு அவள் அருகில் முட்டுவதாக வருவதை பார்த்ததும் சடாரென்று மயக்கம் கொண்டு தரையில் சுருண்டு விழுந்தான், காமேஷ்.
அவன் காதுகளில் அன்று அவன் கேட்ட அதே அலறல் சத்தம்! தினம் தினமும் கனவினில் கேட்டபடி இவனை அனுதினமும் போராட வைக்கும் அதே அலறல் சத்தம்! ஏதோ முணுமுணுக்கிறான். கண்களில் நீர்த்துளிகள் கசிகின்றது.
“அனு!”, என்று அலறியபடி படுக்கையில் இருந்து எழுந்தான்.
அருகில் சாய், அருண், மற்றும் அந்த புதிய நண்பன் பதட்டமின்றி சீட்டு ஆடிக்கொண்டிருந்தார்கள்.
அனு அங்கு இல்லை!
“அனுவா! என்ன மச்சான் கனவா! ஆனா என்ன இனிக்கு வேற ஏதோ பேரு சொல்ற!” என்றான் அருண். இது கனவா அவனால் நம்ப முடியவில்லை, சிகரட் புகையின் எரிச்சல் நெஞ்சில் இன்னும் இருக்கிறது. அவளின் குரலும் தூரத்தில் எங்கிருந்தோ கேட்டபடி இருக்கிறது.
“விளையாடாத அருண்!!” என்று அவன் சட்டையை பிடித்தான்.
“டேய்! த்தா கைய எடுடா! ஒளரிட்டு இருக்குறது நீ, என் மேல கோவப்படுற” என்று அவன் கையை தட்டிவிட்டான்.
அவனுக்கு தலை வெடித்துவிடும் போல் இருந்தது. அவளது குரல் அறையின் மூலை முடுக்குகளில் எல்லாம் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. முடியை பிடித்துகொண்டு ‘அனு’ என்று அழுதபடி தரையில் முட்டியிட்டபடி அமர்ந்தான். தலையை தரையோடு சாய்த்தபடி அவன் கிடக்கையில்,
“ஹாஹா! என்ன காம்ஸ் என்மேல அவளோ பாசமா!” என்றபடி உள்ளே அறைக்குள் இருந்து வெளிப்பட்டாள்அனு, அவளது கன்னங்களிலும் ஈரத்துளிகள் வழிந்த வடுக்கள் தெரிந்தன.
“அட்ரஸ் கேக்க வந்த கார் மச்சான் அது! மானத்த வாங்கிட்டியே காமா” என்றான் சாய் சிரித்தபடி.
கண்ணீரால் சிவந்த முகம், வெக்கமும் கோவமும் ஒருசேர வந்ததால் மேலும் சிவந்தது.
“அதான் உன்கூட இன்னும் ரொம்பநாள் இந்த வாழ்க்கைய ரசிகனும்ன்னு சொன்னேனே, அதுக்குள்ள நான் விட்டுட்டு போய்டுவேன்னு நெனச்சியோ!”, என்று சிரித்தபடி அருகில் வந்து அவனை அணைத்துக்கொண்டாள்.
அறையெங்கிலும் ஆனந்த ஒலி எதிரொலித்தது!
arumai da inba.
ReplyDeleteSiva aaaa
ReplyDeleteAwesome
ReplyDelete