"நான் ஏன் பீச் போற ட்ரைன் ஏறுனேன்?" என்னை நானே குழப்பிக்கொள்கிறேன் என்று மட்டும் தெரிந்தது. அக்டோபர் 12, என் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாக அமையக்கூடும் என்று இரவு 9 மணி வரையில் நான் ஊகித்திருக்கவில்லை. ‘நொடிகள் போதும் வாழ்வினைத் திருப்பிப் போட’ என்பதை அன்று தான் உணர்ந்தேன்.
குரோம்பேட்டை ரயில் நிலையத்தில், படி இருக்கும் பக்கம் இல்லாமல் மறுபக்கத்தின் இறுதிவரையில் சென்று, காலியாக இருக்கும் கல்லிருக்கையில் அமர்ந்துகொண்டேன். அங்கு தான் வழக்கமாக நானும் அவனும் அமர்ந்து காதல் பரிமாறும் இடம். எப்பொழுதும் எங்களை பல இரண்டு கண்கள் கண்டுகொண்டே இருந்தாலும், நாங்கள் அதனை பொருட்படுத்தியதில்லை.
ஆனால், தனிமையில் அமர்ந்துகொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் என்னை, வழிபோகும் எல்லாக் கண்களும் கண்டுநகைப்பதாய் எனக்குள் தோன்றியது. அவர்கள் கண்களுக்கு பைத்தியக்காரப் பெண்ணாய் நான் தெரிந்திருக்கலாம்!
செங்கல்பட்டில் இருக்கும் எனது தோழியின் அறைக்கு செல்வதாய் தான் என் எண்ணம். நாம் எதிர்பார்த்த நேரத்தில் நாம் எதிர்நோக்கிக் காத்திருக்கும் வண்டி என்றுமே வருவதில்லை! என்னால் பொறுத்துக்கொண்டு அமர்ந்திருக்க முடியவில்லை. எனக்குப் பின்னால் புறப்பட ஆயத்தமாகி ஒலி எழுப்பிய பீச் வண்டியில் ஓடிப்போய் ஏறிக்கொண்டேன்.
இந்த பீச் வழிப்பயணம் எனக்கு புதிதன்று! இடையில் வரும் நிறுத்தங்களை, எத்தனை எத்தனை முறை நானும் அவனும் ஒன்றாக கடந்திருப்போம். ஆனால் இன்று அவனை எது மாற்றியது என்று தெரியவில்லை, பிரிவில் முடிந்து தனியாக பயணிக்க வேண்டிய நிலை எனதாகியது.
வழி நெடுகிலும் ரயில் நினைவுகள் என்னை சித்திரவதை செய்துக்கொண்டு வந்தன. எங்களின் ஒருமித்த பயணங்களில் ரயில் வண்டியின் பங்கு அளப்பரியது.
இருவரும் தனியாக, நண்பர்கள் கூட்டத்தோடு என நாங்கள் சென்ற பாதையில் இன்று நான் மட்டும் தனியாக; துணைக்கு என் முதுகிற்கு மேலும் பளு கூட்டும் எனது பேக் மட்டும் தான்.
இன்னும் 15 நிறுத்தங்கள் கடக்க வேண்டும், எப்படியும் ஒரு மணிநேரம் ஆகும். இந்த நிறுத்தங்களின் நடைமேடைகளில், அவ்வளவு சத்தத்திலும் உறங்கும் நாய்களிடம் கேட்டுப்பாருங்கள், அவைகள் சொல்லும் யாம் ஒன்றித் திரிந்த ஆனந்த நிமிடங்களை!
ரயில் சக்கரம் போல் ஒன்றாக சுழன்ற எம்மை, தண்டவாளம் போல் பிரித்தது எதுவோ?
எண்ணவோட்டத்தை எனக்கு கட்டுப்படுத்தத் தெரியவில்லை. எங்கோ எனது மூளையின் மூலையில் தேங்கிக்கிடந்த நியூரான் செல்களெல்லாம் ஒன்றாக வந்து என்னை நினைவுகள் என்னும் எண்ணைச் சட்டியில் போட்டு வறுத்தெடுத்தன.
ஒருவழியாக வண்டி இறுதி நிறுத்தமான சென்னை பீச்சை அடைந்தது. வண்டி அடுத்த சுற்றுக்கு தயாராக பதினைந்து நிமிடங்களாவது எடுத்துக்கொள்ளும். ஆமாம், இந்த பதினைந்து நிமிடங்களிலும் எங்கள் காதல் நொடிகள் சுழலத் தவறவில்லை.
நான் பயணித்தது மரணத்தின் வாயிலுக்குச் சென்று சேரும் வாகனமா என்று கூட ஒரு சிந்தனை எனக்கு! நான் ஏன் அவனைப் பார்க்கவேண்டும்; பழக வேண்டும்; இப்பொழுது பிரிந்து வருத்தம் கொள்கிறோம். இல்லை இல்லை, வருத்தப்படுகிறேன்! நான் மட்டுமே வருத்தப்படுகிறேன்!!
அவன் என்னிடத்தில் கூறிய கடைசி ‘பாய்’யில் அவனுக்கு வருத்தம் என்பது துளியும் இல்லை என்பதை அவன் முகம் எனக்கு காட்டியது. அவன் வருத்தப்பட்டாலும் அதனைப் போக்கி இன்பத்தின் இனிமையை ரசிக்க வைக்க அவனுக்கென்று ஒரு நண்பர் கூட்டம் இருக்கிறது.
நான் ஒரு முட்டாள்! அவனை மட்டுமே என் வாழ்வில் மையப்படுத்தி, எனக்கென்று இருந்த ஓரிரெண்டு நண்பர்களையும் தூரமாக்கினேன். நான் ஒரு முட்டாள்!
புறப்படும் ஒலி எழுப்பியாகியது. ரயில் கிளம்பியது; என் கண்ணீர் வெள்ளமும் அணையை உடைத்துக்கொண்டு கிளம்பியது. கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறேன். ஆங்காங்கே அமர்ந்திருக்கும் சகப்பயணிகள் கண்ணோட்டத்தில் நான் பட்டிருந்தாலும், நான் அவர்களின் எண்ணங்களை கவரவில்லை!
நல்லவேளை என் இருக்கையின் அருகிலும் யாரும் இல்லை. கைகுட்டையால் முகத்தை மூடிக்கொண்டு, கால்களின் மேல் ‘பேக்’ஐ போட்டுப் படுத்துக்கொண்டேன். மூச்சுத் திணறியது, மறுபடியும் நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டே அழுகிறேன்!
கைதட்டல் சத்தம் கேட்கிறது. ’ஒருவேளை என்னை கண்டு கைத்தட்டிச் சிரிக்கிறர்களா?’ என்று கூட எனக்குத் தோன்றியது. ஆனால் இல்லை, ஒரு ‘பெண்ணானவன்’ கை எழுப்பிய ஒலிகள் தாம் அவை.
ரயில் பயணத்தின் இன்றியமையா ஒரு பகுதியை மூன்றாம் பாலினத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எவ்வளவு எவ்வளவு ஆயிரம் பயணிகளை அவர்கள் சந்திக்க நேரிடும், அவர்களின் எத்தனை எத்தனைப் பேர் அவர்களை கண்ணியமாக பார்க்கின்றனர்; மிகவும் சொர்ப்ப அளவே!
"பாப்பா!" என்று என் கைகுட்டையால் மூடிய முகத்தை திறந்து உலகை காண வைத்தாள்!
"சில்ற இல்லக்கா!" என்று அழுகுரலில் கூறினேன். பையில் இருந்த சில்லறைகளை பொறுக்கித் தான் நான் செங்கல்பட்டு பயணச்சீட்டு வாங்கிய நியாபகம், அதனால் தான் பையைக் கூட ஆராயாமல் கூறினேன்.
"ன்னாப் பாப்பா அளுவுற, ன்னாச்சி?" என்றாள்.
"தலைவலி" என்றேன். "அதான் கைலியே தைலம் புட்டி வச்சிக்கிரியே, எத்துத் தடவு" என்றாள்.
‘சரி’ என்றுவிட்டு, மீண்டும் முகத்தை மூடிக்கொண்டேன். கண்ணீர் நின்றபாடில்லை.
"எங்கப் பாப்பாப் போகணும்?"
நான் சாதாரணமான நிலையில் இருந்திருந்தால், ஏதேதோ நினைத்து பயந்திருப்பேன், அவரின் கேள்வியால்! என் நிலையோ அன்று அப்படி இல்லை.
"குரோம்பேட்" என்றேன்.
சரி என்றபடி தலையை ஆட்டி அவர் அமைதியாக என் இருக்கையில் அமர்ந்துக்கொண்டார்.
இன்னும் 14 நிறுத்தங்கள் இருக்கின்றன, கண்ணீர் படுத்தும் பாடு, உடன் இவர் வேறு அருகிலே அமர்ந்துகொண்டார்.
பன்னிரெண்டு நிறுத்தங்கள் எந்த ஒரு வார்த்தையும் இல்லாமல், வெறும் வண்டியின் சத்தம் மட்டுமே இரவின் மௌனத்தை கலைத்துக் கொண்டு வந்தது.
"தலவலிக்குப் போய் அளுவலாமா பாப்பா, தைரியமா இருக்கணும்"
"என்ன ஆனாலும் தைரியத்த மட்டும் விட்டுறக்கூடாது பாப்பா"
இவை இரண்டு வாக்கியங்களே அவ்வப்போது இடையில் அவர் பேசியவை. நான் குரோம்பேட் நிறுத்தத்தில் இறங்க எழுந்தவுடன் அவரும் என்னுடன் இறங்கினார்.
"இனிமேட்டு தனியாலாம் நைட் நேரத்துல ஒலாத்தாத பாப்பா. வூட்டுக்கு சீக்கிரமாப் போய்ச் சேரு" என்றார்.
"வரேன்க்கா" என்றேன்.
"சிரிச்சிட்டே சொல்லு பாப்பா" என்றார். அவர் ஆறுதலுக்காக உதடுகளை சிரிப்பதாகக் கட்டாயப்படுத்தினேன்.
"நானும் வேற என் டேசன் தாண்டிட்டேன்" என்றவர் திரும்பிச்செல்ல அடுத்த நடைமேடை நோக்கி நடந்தார்.
மனதின் பளுவும் முதுகின் பளுவும் தந்த வலிகள் இருந்தபோதும், கண்ணீர் மட்டும் நின்றிருந்தது.
Comments
Post a Comment