Skip to main content

வடக்கன்

இரவு நேரம். சிலரது கவிதைகளையும் பலரது கனவுகளையும் ஏந்திக்கொண்டு நிலவு மாற்றுதிசை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது. இவ்விரண்டு பிரிவுகளையும் சேராத சிலரும் உலகில் இருக்கவே செய்கிறார்கள், அவர்கள் நிலவோடு தங்கள் உறக்கங்களையும் அனுப்பி வைத்தவர்கள். இவனும் அவர்களுள் ஒருவனே.

நித்திரை கொள்ளவில்லை; விழிகள் வலி எடுக்க தொடங்கின. பின் இருக்காதா? இவன் வாழ்வில் ‘நிம்மதியான உறக்கம்தனை ’ எத்தனை மைல்களுக்கு அப்பாலோ, இங்கிருந்து பீகார் எத்தனை மைல் தூரம் இருக்கும் அத்தனை மைல்கள், உறங்க வைத்துவிட்டு வந்தவன் ஆயிற்றே.

இரண்டு ஆண்டுகள் நெருங்கிவிட்டது, இவன் தமிழகத்தை நாடி வந்து. நிலத்தில் இறங்கி பயிர்த் தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த தன்னுடைய இறந்த காலத்தை நினைத்துகொண்டான். உழைத்த களைப்பில் எவ்வளவு சுகமான உறக்கம் வரும் அப்போதெல்லாம்!

கண்ணிற்குத் தெரியாத ஏதோ ஒரு அயல் நாட்டிற்கு செல்வதற்காக அந்த நிலத்தை விற்றுவிட்டான், அதன் சொந்தக்காரன். வேலை பறிபோனது. இவன் என்ன செய்ய, வேலை தேடி அலைந்தான், பசி இங்கு கொண்டுவந்து சேர்த்தது.

மாதம் ஆயிரம் ரூபாய் அனுப்புகிறான், அவன் குடும்பத்தினருக்கு. ஆம் திருமணம் ஆகியவன் தான், ஆறு மாதமே ஒன்றாக இருந்தார்கள். பிறகு இங்கு வந்துவிட்டான்.

ஒரு குழந்தையும் பிறந்தது. ஒரு முறை தன் காண்ட்ராக்ட்காரர் கைகாலில் விழுந்து விடுமுறை வாங்கி சென்றான், அந்த பிஞ்சு முகத்தை காண்பதற்கு.

இவன் நிலையை என்னவென்று சொல்ல, ஒரு ஆண் குழந்தையை பெற்று வைத்திருந்தாலாவது சில வருடங்கள் கழித்து சோற்றுக்கு உதவுவான். பெட்டையாய் போய்விட்டது. இது மேலுமல்லவா செலவு வைக்கும்! ஆனால் பெயரை மட்டும் ‘லக்ஷ்மி’ என வைத்திருந்தாள் அவள் தாய்; கொடுமையிலும் கொடுமை.

பத்தாத குறைக்கு  குழந்தை சோகையாய் வேறு போய்விட்டது. அரசாங்கமே மனசு வைத்து ஊட்டச்சத்து மருந்துகள் தந்தால் மட்டுமே உண்டு.

ஆயிரம் ரூபாய் போதவில்லை, மனைவி நூறுநாள் வேலைக்கு போனால் கொஞ்சம் கைகொடுக்கும்.  மற்றபடி சூழ்நிலை மேல் பாரத்தை போட்டுவிடுவாள் அந்த திருமகள்.

ஒரு மாதத்தில் தனக்கு ஊதிய உயர்வு கிடைக்கப்போகிறது என்றும் அதன் பிறகு அவர்களையும் இங்கு அழைத்துக்கொண்டு வந்துவிட வேண்டும் என்பது இவன் எண்ணம். இங்கு வைத்து எப்படி பார்த்துக்கொள்வானோ, அவனுக்கே  அது வெளிச்சம்.

ஒருவேளை, அவளையும் இந்த கட்டிட பணியில் ஈடுபடுத்திவிட்டால், சோற்றுக்கு ஆகும் என்று நினைத்திருப்பான்.

ஆனால் அது மட்டுமே காரணமன்று, இவன் ஊரில் எல்லா குடும்பங்களும் குறைந்தது மூன்று பிள்ளைகளாவது வைத்திருப்பர்.  இவனோ ஒற்றையாய் அதையும் பெட்டையாய் வைத்திருக்கிறான். கௌரவக் குறைச்சல்!

நினைவுகளின் அலையில் மிதந்துக்கொண்டிருந்தவனை வண்டி குலுங்கிய குலுக்கல் நிஜவாழ்விற்குள் அழைத்து வந்தது. ஆம், இவனோடு சேர்ந்த ஒரு பெருங்கூட்டம் கண்டைனர் லாரியில் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டது.

ஏதோ ஒரு புதிய நோய் பரவுகிறதாம். அரசாங்கம் எந்த தொழிலும் இயங்கக்கூடாது, வெளியே வரக்கூடாது என்று ஆணை பிறப்பித்தனராம். இவர்களை இங்கே வைத்திருந்தால் வீண் செலவு தான் என்று கருதினார்களோ என்னமோ, முதலாளிகள் இவர்களை சொந்த ஊரைப்பார்த்து போகும்படி சொல்லிவிட்டார்கள்.

ஒன்றிரண்டு நாட்கள் இங்கேயே இருக்க முயற்சித்தார்கள்; இயலவில்லை. பிறகு நடைப்பயணமாகவே பீகார் வரை சென்றுவிடவே முதல் யோசனை.


பின்னர் சுற்றித் திரிந்து நிறுத்தி வைத்திருந்த ஒரு லாரியை கையில் இருந்த காசை வைத்து வரவழைத்தார்கள்; அரசாங்கம் அத்தியாவசிய சரக்கு போக்குவரத்துக்காக அனுமதியளித்தது இவர்களின் முன்ஜென்ம பயனாக இருக்கும் போலும்!

லாரி கண்டைனர் அதன் அளவுக்கு மீறி ஆட்களை ஏற்றிக்கொண்டு செல்லுகிறது. இவர்கள் விடும் மூச்சு காற்றும் வெளியே போகாமல், வெளிக்காற்றும் உள்ளே வர அனுமதிக்காமல், ஒருவரின் சுவாசத்தை மற்றொருவர் சுவாசித்து உயிரைப் பிடித்தபடி பயணிக்கின்றனர்.

வெளியே இடியுடன் மழை பெய்யும் சத்தம் கேட்கிறது. இவனுக்கு மழை என்றால் அவ்வளவு பிடிக்கும். அதுவும் கோடையில் மழை என்றால், இவனை கையில் பிடிக்க முடியாது. ஏனெனக் கேட்டால், கோடைமழையில் தான் இடியும் மின்னலும் தோன்றுமாம்!

படிப்பறிவு இல்லாமல் பல ஆண்டுகள் இவனைப்போன்றவர்கள் அடக்கப்பட்டிருந்தாலும், ஏதோ கொஞ்சம் சுயஅறிவு இருக்கத்தான் செய்கிறது!

இவனுடன் இவனது நண்பனும் வருகிறான். ஒரே மாநிலத்தவர்கள் என்றாலும், இங்கு வந்தப் பிறகே  பழக்கம் படுத்திக்கொண்டவர்கள். இப்போது இவனது எல்லாமும் அவன் தான். பலமுறை குடும்பத்தைப் பற்றி கூறி புலம்பியிருக்கிறான்.  அத்தகைய நட்பு இவர்களது.

அவன் மட்டும் எப்படி நின்றபடியே உறங்குகிறானோ?? ஆச்சர்யம் தான்!

பயணம் தொடங்கி எப்படியும் ஐந்து ஆறு மணி நேரம் ஆகியிருக்கும். ஒருமணி நேர இடைவெளியில் வண்டியை நிறுத்தி ஆசுவாசப்படுத்த விடுவார்கள். இடைவிடாது பெய்யும் அசுர மழை அதற்கும் தடைபோட்டது.

இரண்டு மணி நேரமாக வெளி இருளை பார்க்காமல் தொடருகிறது பயணம்.

எப்படியோ விடிந்துவிட்டது, ஆனாலும் இருள் முழுதும் விலகவில்லை. மழையும் தான் நிற்கப்போவதாய் விட்டு விட்டு பெய்தபடி அறிவித்தது.

வண்டியை ஒரு நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தியிருந்தார்கள். ஆனால் யாரையும் வெளியில் வரவிட வில்லை. நிலைமை சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு திறப்பதாய் வண்டி ஓட்டியவன் கூறினான். அவனுக்கு எப்படியோ இவர்கள் பாஷை தெரிந்திருந்தது.

எந்த மாநிலம், எந்த மொழி என்று ஏதும் தெரியவில்லை; பரந்து விரிந்து கிடந்த இந்த பாரத பூமியில் இவர்களைக் கண்டு இரக்கம்கொள்ள மனிதர்கள் இல்லாமலா போய்விடுவார்கள்.

யாரோ ஒருவர் வருவதை பார்க்கிறான். இல்லை இரண்டு மூன்று நபர்கள் வருகிறார்கள்.  ஒரு கையில் குடை இன்னொரு கையில் ஏதோ காயிதங்கள்.

‘அய்யோ போலீஸ்’ என்று அவன் அலறிய சத்தம் இவன் காதுகளை எட்டியது. அந்த சத்தம் கேட்ட சில நிமிடங்களில் கதவும் திறக்கப்பட்டது. வெளிக்காற்று இவனை பலமாக வந்து சேர்ந்தது.

தாயின் கருவறையை விட்டு விலகாத வரை நுரையீரல் மூலம் சுவாசிக்காத குழந்தை வெளியே வந்ததும், அதன் முதல் சுவாசிப்பு நெஞ்சில் கைவைத்து அழுத்துவதை போல் இருக்குமாம், அதனால் தான் குழந்தை பிறந்தவுடன் அழுகிறது என்று யாரோ சொல்லிக் கேட்டிருக்கிறான். அப்படித்தான் இருந்தது இவனுக்கு!

கண்டைனர் விட்டு வெளியேறும்படி சைகை காட்டினார் காவலர் ஒருவர். எல்லாரும் அடித்துபிடித்து வெளியே வந்தனர். இவனும் மூச்சு வாங்கியபடி வெளியே வந்தான். தோளைப் பிடித்தபடி நண்பனும் கூடவே இறங்கினான்.

பூட்டிய அறையில் இருந்த விழிகள் ஒளிக்கு இன்னும் பழகவில்லை, அதனாலே கூசுகிறது என்று தான் முதலில் நினைத்தான். போகப்போக பார்வை மங்கலானது; மூச்சு விடுவதில் மேலும் சிரமம் ஏற்பட்டது. அப்படியே சுருண்டு தரையில் விழுந்தான்.

விழுந்தவனின் தலையை பதறி அடித்தபடி கீழே அமர்ந்துக்கொண்டு  தனது மடியில் ஏந்தினான் அந்த நண்பன். கண்கள் கலங்கிக் கிடந்தன.

படுத்திருந்தவன் தன் சட்டைப்பையில் இருந்து ஒரு போட்டோவை எடுத்து அவன் கையில் திணித்தான்.

எதோ பிதற்றுகிறான்; சரியாக கேட்கவில்லை. தலையை இவனது வாயருகில் சாய்த்து கேட்கிறான்.

‘தூக்கமா வருது’ என்றான் அவனது மொழியில். இமைகள் மெதுவாக மூடின.

பல ஆண்டு கால களைப்பின் மிகுதியால் ஏற்பட்ட நிரந்தர உறக்கம்.

கண்ணீரும் மழையும் எத்தனை துளிகள் விழுந்தாலும், இவனுக்கு இனி எந்தப் பயனும் இல்லை, தொந்தரவும் கிடையாது.

இவன் வேறு யாரும் இல்லை.

எப்பொழுதாவது உங்கள் தெருவில் திரிவான், உங்கள் தெருநாய்கள் கூட குரைத்திருக்குமே!

இவன் சட்டையையும் நிறத்தையும் வைத்து கணித்தப்படி, ‘வடக்கன்’ என்று ஏளனப் பார்வை பாய்ச்சி இருப்பீர்களே!

இனி உங்கள் ஊர் நாய்களுக்கு நிம்மதி பிறக்கும்!

    


Comments