Skip to main content

ஆம்பள டா..!!

 

தமிழ் திரைப்படமான காஞ்சனா படத்தில் கதாநாயகனுக்கு பேய் பிடித்துவிடும். அதனால் ஏற்பட்ட உடல் மொழி மாற்றத்தைக் கண்ட அவரது அண்ணன், ‘ராகவா பொண்ணு மாதிரி நடந்துகாதடா!’ என்பார். அந்த அளவிற்கு பெண்ணாக அவர் அந்த இடத்தில் என்ன செய்து விட்டார்? ‘இல்ல, புரில எனக்கு!!’

நமது சமூகம் ஆண்களால் ஆண்களுக்காக ஆண்களாகவே கட்டமைக்கப்பட்ட ஒரு ஆண் சமூகம், ‘நீங்க நம்பலனாலும் அது தான் நெசம்’. அந்த சௌகரிய இடத்தை இழக்காமல் காலாகாலத்திற்கும்  பாதுகாக்கவே அவர்கள் பெண்களை பயன்படுத்தி வந்துள்ளனர்; வருகின்றனர். இங்குள்ள மதங்களும் மற்றைய சமூக அமைப்புகளான திருமணம் போன்றவைகளும் அதற்கே துணைபோகின்றன.

அதே நேரத்தில் பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக குரல் எழுப்பிய பெண்களின் மறைக்கப்பட்ட வரலாறும் இங்கு பல உண்டு. அவர்கள் விடுத்துச் சென்ற விடுதலை உணர்வு இங்குள்ள பெண்களுக்கு இல்லாமல் இல்லை. காலம் காலமாக தாங்கள் எவ்வாறு அடக்குமுறைக்கு ஆளாக்கப் பட்டிருக்கின்றோம் என்று அவர்கள் சிந்திக்கத் தொடங்கியதாலே இன்றைய வாழ்வில் அவர்களால் சிறிதேனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிகின்றது. 

ஆனால், இந்த சமூகம் ‘ஆண்’மயமாகியதால் ஆண்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்கள் என்று ஆண்களோ பெண்களோ கருதுவார்களானால், அதைவிட ஒரு மூடத்தனம் ஒன்றில்லை என்பேன்.

‘சர்வதேச ஆண்கள் தினம்’ என்று ஒருநாள் உண்டு. அன்றைய தினம் இணையத்தில் நம்மவர்களை கையிலேயே பிடிக்க முடியாது. ‘குடும்பத்தின் வருமான பாரத்தை தாங்க வேண்டி பிடித்த படிப்பை படிக்காமல் பிடித்த வேலையை செய்ய முடியாமல் கிடைத்த வேலையில் பலரது வசைகளுக்கு மத்தியில் மௌனம் காத்து, காசு சேர்த்து, அக்கா தங்கைகளுக்கு திருமணம் நடத்த வேண்டி தாங்கள் யாரையும் காதலிக்காமல், வந்த காதலையும் தட்டி உதறிவிட்டு, மன உளைச்சலுக்கு ஆளாகி ‘ஆண்களாய்’ ஆகிவிட்ட படியால் அழக் கூட முடியாத பாவப்பட்ட பிறவி நாங்கள்’ என்று விதவிதமாக கம்பு சுற்றுவார்கள். பல பெண்களும் இதனை தங்களுக்கு ஏற்ற modulation-ல் ஆண்களுக்கு இணையாக சுற்றுவார்கள்.

எனக்கு எப்பொழுதும் தோன்றுவதுண்டு, இந்த இன்னல்களுக்கு மூலக் காரணமே ஆதியின் ஆண்கள் தாமே, இன்றைய ஆண்கள் நினைத்தால் அதனை மாற்ற முடியுமே, பிறகு ஏன் இந்த கதறல்கள்? ஆம் உண்மையே.  

ஆண்களை அழவிடுவதில்லை; கண்ணீர் விட்டால் இந்த சமூகம் அவர்களை இழிவாக, அதாவது பெண்களாக(!), பாவிக்கும்.  அழுகை என்பது இயற்கையாக ஆண் பெண் என இருபாலார்க்கும் பொதுவே. எல்லா வித உணர்வுகளுக்கும் உச்சநிலையில் கண்கள் கண்ணீர் சிந்துவது இயல்பு தான்.  

ஆனால், பெண்கள் தான் அழுவார்கள், ஆண்கள் அழுதால் அது கேவலம் என சிறு வயதில் இருந்தே நஞ்சை விதைப்பார்கள் பெற்றோரும் மற்றவர்களும். பிறகு அவன் வளர்ந்து பெரியவனாகி, இன்பமோ துன்பமோ கோவமோ தாபமோ அழ முடியாமல் மனம் ரணமாகி heart attack வந்து இறக்க நேரும். 

நவநாகரீக ஆண்களே, சிந்தியுங்கள், கண்ணீர் சிந்துங்கள்! பெண்கள் மட்டும் அழுக விட்டு, உங்களை கண்ணீர் சிந்த விடாமல் சீக்கிரமே உங்களின் ஆயுளை பறிக்க உமது முன்னோர்களான பெண்களின் கணவன்மார்கலான ஆண்கள் தீட்டிய சதித்திட்டம் இது. இதற்கு நீங்கள் பலியாக வேண்டாம்.

அடுத்து, ‘குடும்ப பாரம்’. எங்கே பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துவிட்டால் அவர்கள் நம்மை மதிக்காமல், நமக்கு எதிராகவே செயல்பட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் அவர்களை படிக்க விடாமல், பணம் சம்பாதிக்க விடாமல் பாதுகாத்து வந்தது நமது ஆண் சமுகம். இன்றும் பெண்களை படிக்க விடாமலும் சம்பாதிக்க விடாமலும் தடுத்து வந்தால், அவர்களுக்கும் சேர்த்து சம்பாதிக்கும் பாரம் ஆண்கள் தலையில் தான் விழும்.

படித்து முடித்த உடனே, இல்லை, முடிக்கும் முன்னரே ஆண்கள் வேலைக்கான உத்தரவை வாங்கி வைத்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. பிடித்த வேலைக்காகவோ, இல்லை, ஆசைப்பட்டு உயர் படிப்பு படிக்கவோ சிறிது கால அவகாசம் எடுத்துக் கொள்ள ஆணுக்கு பெரும்பாலும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. உடனடியாக பணிக்கு சென்று பணம் ஈட்டவேண்டும் என்று ஆண்களின் கழுத்தில் ஏறி நிற்கிறது ‘ஆண்’மய சமூகம்.  

எந்த பெண்களின் பொருளாதாரத்தை தடுத்து ஆண்கள் சொகுசு வாழ்கை வாழ விரும்பினார்களோ, இன்று அந்த பெண்களின் வேலைக்கு செல்லும் உரிமையை பறித்தால் ஆண்கள் தான் தங்களுக்கு பிடித்த பணியை தேர்ந்தெடுத்து வாழும் இன்பத்தை இழக்க நேரும்.

பெண்களை சம்பாதிக்க விடுங்கள், அவர்களுக்கான பொருள் தேவைகளை அவர்களாகவே பூர்த்தி செய்து கொள்வார்கள். அவர்களின் உடைகளைப் பற்றிய கவலைகள் உங்களுக்கு வேண்டாம், அவர்களின் வாழ்கையை பற்றிய பயமும் உங்களுக்கு வேண்டாம். ஆண்களே நீவிர் சற்று நிம்மதி அடையுங்கள், அவர்களின் வாழ்கையை அவர்களிடமே விட்டு விடுங்கள், வீணாக பாரத்தை உங்கள் தலையில் போட்டுக் கொள்ளாதீர்கள். 

பல நேரங்களில் ஆண்களால் தங்களின் உண்மை குணங்களையே வெளியே காட்டிக்கொள்ள முடிவதில்லை. சத்தமாக பேச முடியவில்லை என்றால், கோவப் படுவதில்லை என்றால், bikes cars மீது அதிக ஆர்வம் வரவில்லை என்றால், சண்டை காட்சிகளில் மனம் விருப்பம் இல்லையென்றால், இப்படி எத்தனையோ என்றால்-களை அடுக்கிக் கொள்ளுங்கள். அவற்றையெல்லாம் வெளிக் காட்டினால் ‘ஆம்பளயா நடந்துக்கோ’ என்பார்கள்.   

எல்லா ஆண்களுக்குள்ளும் பெண்கள் இருக்கின்றார்கள். அதாவது நாம் வரையறுத்து வைத்துள்ள ‘பெண்’தன்மை இருக்கின்றது. காஞ்சனா படத்தில் வருவது போல, ‘பொம்பள மாதிரி பண்ணாத’ என்று உங்களை கீழ்மை படுத்தப்பார்பார்கள். ஆனால், இதில் கீழ்மை அடைய ஏதும் காரணம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்?

காட்டில் இருக்கும் சிங்கம், புலி, யானை முதலான Animal species-களை நம்மோடு ஒப்பீடு செய்யும்போது, அவற்றை விட பலவித பாரிமானங்களிலும் முன்னேறிய சக Homo Sapiens-களான பெண்களை ஆண்களோடு ஒப்பிடுதல் இழிவா என்ன?

மீசை தாடி வளரவில்லை என்றால் கூட உங்களது ‘ஆண்’ தன்மையை கேள்விக்கு உட்படுத்துவார்கள். உங்களை மற்ற ஆண்களிடம் இருந்து insecure-ஆக்கி விடுவார்கள். Bearded guys-களைத் தான் பெண்களுக்கு பிடிக்கும் என்று கிளப்பி உங்களை காதலிக்க விடாமல் செய்வார்கள். இதற்கெல்லாம் ஆளாகாதீர்கள்.

ஆண்களே, உங்களின் உண்மையான குணங்களை பாரபட்சமின்றி வெளியே காட்டுவதற்காக, உங்களுக்கு பிடித்த தொழிலை எந்த சமூக சிக்கல்களும் இன்றி செயல்படுத்துவதற்காக, மீசையோ தாடியோ  இல்லை என்றால் ‘மயிறுல என்ன பெருமை’ என்று சாதரணமாக விட்டு விடுவதற்காக, சுதந்திரமாக மனம் விட்டு அழுவதற்காகவேணும், இந்த ஆணாதிக்க உலகில் நீங்கள் நீங்களாகவே ஆண்களாகவே வாழ்வதற்கு Feminism பேசுங்கள்; பழகுங்கள்.

ஆம். Feminism பெண்களுக்கானது மட்டுமல்ல ஆண்களுக்கும் தான்; எல்லா பாலினத்தவருக்கும் தான். அதனை பெண்களுக்கு மட்டுமானது என்று அவர்களிடம் விட்டு விடாதீர்கள். உங்கள் கைகளையும் கால்களையும் நீங்களாகவே கட்டி வைத்துள்ள invisible கயிறுகளை Feminism கொண்டு அறுத்து எறியுங்கள். ஆண் என்பதில் பெண்ணை விட எந்த பெருமையும் இல்லை என உணருங்கள். 

இதற்கு மேலும் ‘ஆஆம்பள..ஆஆம்பள...’ என ஆம்பள பட விஷாலைப் போல் திரிந்தால்.. 

Comments

  1. அனல் பறக்கும் கருத்துகள் 🔥இந்த சமூகம் முன்னேற அதாவது ஆதிக்கம் ஒழிந்து சமத்துவம் பிறக்க பெண்ணியம் அத்தியாவசியமானது என்பதை உணர்த்துகிறது. பெண்ணியம் பின்பற்றுவோம்💙உங்களின் இந்த பதிவுக்கு வாழ்த்துக்களுடன் எனது மனமார்ந்த நன்றிகள்🙏🏽❣

    ReplyDelete

Post a Comment